ஈரோடு: “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்பது இந்திய அளவில் அல்ல உலகளவில் வேறு எங்கேயும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால்தான் ஐநா மன்றமே இத்திட்டத்துக்கு விருது தந்திருக்கிறது. 2 கோடியாவது பயனாளிக்கு தமிழக முதல்வரால் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடியாவது பயனாளி சுந்தரம்பாள் என்பவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தா என்பவரை சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்வுக்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஐநா சபையில் உலகில் தொற்றா நோய்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் பார்க்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் 2024-ம் ஆண்டுக்கான ஐநா மன்றத்தின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விருது அறிவிக்கப்படும்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 97 லட்சம் பேர் பயனடைந்து இருந்தனர். இன்று 2 கோடியாவது பயனாளிக்கு தமிழக முதல்வரால் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம், உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1 கோடி பேர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 49.45 லட்சம் பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 44.28 லட்சம் பேர், நோய் ஆதரவு சிகிச்சை பெறுபவர்கள் 5.40 லட்சம் பேர், இயன்முறை சிகிச்சை பெறுபவர்கள் 7.25 லட்சம் பேர், சிறுநீரக சிகிச்சை (டயாலிஸிஸ்) பெறுபவர்கள் 434 என்கின்ற வகையில் இதுவரை 2 கோடியை கடந்து இந்த சிகிச்சைகள் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் தொடர் சேவை என்கின்ற வகையில் 4.29 கோடி பேர் பயன்பெற்றுள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 7 லட்சத்துக்கும் மேலானவர்கள் இந்த சிகிச்சையில் பயன்பெற்று வருகிறார்கள். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்தே கண்காணித்து இத்திட்டத்தின் வளர்ச்சியை தொடர் ஆய்வு செய்ததன் காரணமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்பது இந்திய அளவில் அல்ல உலகளவில் வேறு எங்கேயும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால்தான் ஐநா மன்றமே இத்திட்டத்துக்கு விருது தந்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.