மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் NICU (குழந்தை பராமரிப்பு பிரிவு) மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குழந்தைகள் திடீரென அழத் தொடங்கின. உடனே செவிலியர்களும், மருத்துவர்களும் குழந்தைகளை சோதித்திருக்கின்றனர். இதற்கிடையில், ஒவ்வொரு குழந்தையாக மரணிக்கத் தொடங்கின.
செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்து நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜம்போ சிலிண்டரிலிருந்து உடனடியாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன் பிறகே, குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்காகப் பொருத்தப்பட்ட குழாய்கள் திருடப்பட்டிருப்பதும், அதனால், ஆக்ஸிஜன் தடைப்பட்டதும் தெரியவந்தது.
இந்த மோசமான சம்பவத்தில் 12 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக ராஜ்கர் மாவட்ட மருத்துவமனை அதிகாரி, “புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் தாமிரத்தாலான ஆக்ஸிஜன் பைப்லைனை திருடர்கள் வெட்டி திருடியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு புதிய கட்டடத்தில் இது போன்று நடந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.