மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோருவதா? – காங். எம்எல்ஏவுக்கு ஆதித்ய தாக்கரே கண்டனம்

மும்பை: மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கும் எந்த முயற்சியையும் தங்கள் கட்சி பொறுத்துக்கொள்ளாது என்று சிவசேனா (உத்தவ் அணி) வைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் நிதித் தலைநகரை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று கோரிய கர்நாடக எம்எல்ஏவை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆதித்ய தாக்கரே, மும்பையை தனது தாய்நாடு என்று அழைத்துள்ளார்.

மும்பையின் வோர்லி தொகுதி எம்எல்ஏவான ஆதித்ய தாக்கரே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கண்டிக்கத்தக்கது. அது காங்கிரஸ் அல்லது பாஜக எதுவாக இருந்தாலும் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கும் எந்த முயற்சியையும் சிவசேனா (உத்தவ் அணி) பொறுத்துக்கொள்ளது. மும்பை எங்களின் தாய்பூமி. மராத்தி மனுஸ் அவர்களின் ரத்தம் சிந்தி இதனை பெற்றுள்ளனர். மும்பை எங்களுக்கு யாராலும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமை அவர்களின் எம்எல்ஏக்களை கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகராஷ்டிராவில் உள்ள தலைவர்கள் பெலகாவியை யூனியன் பிரதேசமாக மாற்றக்கோரினால், மும்பையும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ லக்ஷ்மன் சேவாடி தெரிவித்திருந்தார். ஆதித்ய தாக்கரே தற்போது அதனைச் சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அதன் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு இடையில், கர்நாடகா எல்லை நகரமான பெலகாவி (முன்பு பெல்காம்)யை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது தொடர்பாக பல தசாப்தங்களாக பூசல் நிலவி வருகிறது. கர்நாடகா எல்லை பகுதியில் இருந்தாலும், அங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் மக்கள் மராத்தி பேசுகின்றனர்.

உத்தவ் அணி சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் மகாவிகாஸ் அகாடியில் ஒரு பகுதியாகும். இந்த மூன்று கட்சிகளும் நாட்டின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.