Ravichandran Ashwin Sudden Retirement: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று மிகவும் அதிர்ச்சிகரமான சோகமயமான நாளாக அமைந்தது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ஒருபுறம் இருக்க, மூன்றாவது டெஸ்ட் முடிந்த கையோடு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதான் பெரியளவில் நேற்று முதல் பேசுபொருளாகி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு (Team Australia) எதிரான இந்த தொடர் இந்திய அணியை பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் இந்தியா இங்கு தொடரை வென்றுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் இந்திய அணிக்கு தொடரை வெல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்திலும் அஸ்வின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை இரண்டாவது போட்டியில் மட்டுமே இந்திய அணி களமிறக்கியது எனலாம்.
The love we give away is the only love we keep pic.twitter.com/kfkGjGfNE7
— Ashwin(@ashwinravi99) December 18, 2024
இனி வாஷிங்டன் சுந்தருக்கே வாய்ப்பு?
மூன்றாவது போட்டியில் அவருக்கு மீண்டும் ஓய்வளித்தது. மெல்போர்ன், சிட்னி ஆகிய மைதானங்களில் அஸ்வின் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பதால் அவருக்கு அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயலாற்றியதாலும், ஆஃப் ஸ்பின்னர் மற்றும் பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்பதாலும் வாஷிங்டன் சுந்தருக்கே (Washington Sundar) இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த பேச்சுகளுக்கு மத்தியில்தான் அஸ்வின் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தோனியின் கதை வேறு
டெஸ்ட் தொடருக்கு நடுவே முக்கிய வீரர் ஓய்வை அறிவிப்பது இது முதல்முறையல்ல. கடைசியாக தோனியும் 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், டெஸ்ட் தொடருக்கு நடுவே கேப்டன்ஸி பதவியை துறந்தது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பின் தோல்வியின் சுவடுகள் படிந்திருந்தன. ஆனால், அஸ்வினின் கதையே வேறு. பார்மில் இருக்கும் அவர் திடீரென சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக டெஸ்ட் தொடரின் நடுவே அறிவித்திருப்பது கிரிக்கெட் வல்லுநர்கள் இடையேயும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
நீடிக்கும் குழப்பம்
ரோஹித் சர்மா (Rohit Sharma) நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கூட, அஸ்வின் இந்த முடிவை பெர்த் டெஸ்டின் போதே எடுத்துவிட்டார் என்றும் நான்தான் பகலிரவு போட்டியிலாவது விளையாடுங்கள் என சொல்லியதாக தெரிவித்தார். அப்படியிருக்கும்பட்சத்தில் அஸ்வின் ஏன் இந்த சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்றும் கேள்வி எழுகிறது. மேலும், “இந்தத் தொடரில் நான் இப்போது தேவையில்லை என்றால், நான் கிரிக்கெட்டில் விடைபெறுவது நல்லது” என அஸ்வின் தன்னிடம் தெரிவித்ததாகவும் ரோஹித் கூறியுள்ளார்.
பிரியாவிடை போட்டி?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் ஜாம்பவானாக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் வீழ்த்திய விக்கெட்டுகள், அடித்த சதங்கள் ஆகியவற்றை தாண்டி டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு அஸ்வினின் பங்கு அளப்பரியது. அதை யாராலும் ஏன் விராட் கோலியாலும் கூட ஈடு செய்ய இயலாது. அப்படியிருக்க, அஸ்வினுக்கு இந்திய மண்ணில் ஒரு பிரியாவிடை போட்டியை கூட பிசிசிஐ ஏற்பாடு செய்யாமல் போனது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஸ்வின் திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்?
ஆனால், இந்திய அணி (Team India) இதற்கு பின் அடுத்து தொடர்ச்சியாக வெளிநாட்டில்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்தாண்டு அக்டோபர் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணியுடனும், அடுத்தாண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்கா உடனும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்கிடையே வரும் WTC இறுதிப்போட்டி (தகுதிபெறும்பட்சத்தில்), இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என ஆகஸ்ட் மாதம் வரை இந்திய அணி வெளிநாட்டில்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வெளிநாடுகளில் இந்திய அணி பெரும்பாலும் அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காததன் காரணமாகவே, அஸ்வின் தற்போதே ஓய்வை அறிவித்து நாடு திரும்பியிருக்கிறார் என கூறப்படுகிறது.