மாஸ்கோ,
ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று அதிகாலை வெடித்தது. இதில் ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் 29 வயதான அந்த நபர், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், உக்ரைன் உளவுத்துறைக்காக வேலை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.