சமீபத்தில் அத்தனை விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமிழக வீரர் அஷ்வின் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரின் தந்தை ரவிச்சந்திரன், ‘அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்.’ எனப் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
நியூஸ் 18 ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் அவர், “எனக்கும் கடைசி நிமிடத்தில்தான் அவரின் ஓய்வு முடிவு பற்றித் தெரியும். அவரின் ஓய்வு முடிவை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் சோகமாகவும் இருக்கிறது. அவர் இன்னும் சில காலங்களுக்கு ஆடியிருக்க வேண்டும். ஆனால், அவர் எடுத்த முடிவில் என்னால் தலையிட முடியாது. அந்த முடிவை அவர் எடுத்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவர் மனரீதியாகக் காயப்பட்டிருக்கலாம்.
14-15 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்டார். இப்போது திடீரென ஓய்வை அறிவிப்பது எல்லாருக்குமே அதிர்ச்சிதான். ஆனால், நான் கொஞ்சம் இதை கணித்திருந்தேன். ஏனெனில், அவர் மனதளவில் காயப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். எவ்வளவு நாள்தான் அவராலும் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால்தான் ஓய்வை அறிவித்துவிட்டார்.” என அஷ்வினின் தந்தை ரவிச்சந்திரன் பேசியிருந்தார்.
இந்நிலையில் தனது தந்தையின் பேட்டி பற்றி X தளத்தில் விளக்க கொடுத்திருக்கும் அஷ்வின், ‘மீடியாக்களில் பேசும் அளவுக்கு என்னுடைய தந்தை பயிற்சி பெற்றவர் அல்ல.’ என பதிவிட்டிருக்கிறார்.