இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய நட்சத்திரமான அஷ்வின் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். கடந்த 14 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். கொண்டாடத்தக்க முழுமையான கரியரை அவர் நிறைவு செய்திருக்கிறார். அவருக்கான விடைபெறல் இன்னும் திருப்திகரமானதாக இருந்திருக்க வேண்டும்.
மாறாக, அவர் லெவனிலேயே இல்லாத ஒரு போட்டியோடு தான் களத்திலேயே இறங்காத ஒரு போட்டியோடு ஓய்வை அறிவித்திருக்கிறார். அஷ்வின் மட்டுமில்லை, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் எந்த வீரரின் ஓய்வுமே நிறைவானதாக கொண்டாடத்தக்கதாக இருந்திருக்கவில்லை. பிசிசிஐ ஏன் அதற்கான முன்னெடுப்புகளை எடுக்கவே இல்லை? ஜாம்பவான் வீரர்களை பிசிசிஐ கொண்டாட மறுப்பது ஏன்?
இந்திய அணி கண்ட தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. இந்தியா வெல்லாத கோப்பைகளையெல்லாம் வென்றுக் கொடுத்தார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஓடிஐ உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 என அவரின் சாதனைகளைத்தான் இன்றைக்கும் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரின் ஓய்வும் இந்திய அணியிலிருந்து அவரின் விடைபெறலும் எப்படி இருந்தது? 2014-15 பார்டர் கவாஸ்கர் தொடரின் இடையிலேயே கேப்டன் பதவியை துறந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்தார். அந்த சமயத்திலேயே பிசிசிஐ அவருக்கு விழா எடுத்து கொண்டாடியிருக்க வேண்டும். அப்போது விட்டு விட்டார்கள். சரி, 2019 உலகக்கோப்பையோடு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். அந்த ஓய்வு முடிவை ஒரு ஆண்டு கழித்து 2020 -ல்தான் தெரிவித்தார்.
இதற்கிடையிலேயே விடைபெறலுக்கென அவருக்கு ஒரு போட்டியை ஏற்பாடு செய்து ஆட வைத்து திருப்தியாக அவரை வழியனுப்பியிருக்க வேண்டும் அல்லது ஓய்வு முடிவை அவர் அறிவித்த பிறகு அவரை கொண்டாடும் விதத்தில் ஒரு நிகழ்வை நடத்தி அவரை கௌரவித்திருக்க வேண்டும். இது எதையுமே பிசிசிஐ செய்யவில்லை.
அதேதான் இப்போது அஷ்வினுக்கும். ‘என்னுடைய சேவை இனி அணிக்கு தேவையில்லையெனில் நான் விலகிக்கொள்கிறேன்.’ எனக் கூறிவிட்டுதான் அஷ்வின் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இந்திய அணியின் தேர்வுக்குழு அஷ்வினை தாண்டி யோசிக்கிறது எனில் அதை தெளிவாக அஷ்வினிடம் முன்பே கூறியிருக்க வேண்டும். நடந்த முடிந்த ஹோம் சீசனையே அவருக்கான ஓய்வு பெறும் மேடையாகவும் மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும்.
உள்ளூரில் நடந்த வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடருடனே அவர் திருப்தியாக ஓய்வு பெற வழியமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கு அவரை எடுத்து லெவனில் எடுக்காமல் பென்ச்சிலேயே வைத்திருந்தார்கள். அந்த வருத்தத்தோடு இப்போது அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
சச்சினுக்குப் பிறகு எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ திருப்தியான விடைபெறலை ஏற்பாடு செய்துகொடுத்தது என யோசித்துப் பாருங்கள், யாருக்குமே இல்லை. 2011 உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த அத்தனை பேருமே கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள்.
ஹர்பஜன், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான் என யாருக்குமே எந்தவிதமான கௌரவப்படுத்தும் நிகழ்வும் நடத்தப்படவில்லை. அவர்களை இந்திய அணியிலிருந்து வெளியேற்றும் முடிவுக்கு வந்தாலும் எதாவது உள்ளூர் போட்டிகளிலாவது அவர்களை ஆட வைத்து அதை இறுதிப்போட்டியாக மாற்றி அவர்களுக்கான மரியாதையை செய்திருக்க வேண்டும். இது எதையுமே பிசிசிஐ செய்யவில்லை.
ஆண்டர்சனை இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் கொண்டாடி தீர்த்து வழியனுப்பி வைத்தது. நியூசிலாந்தின் டிம் சவுத்தியையும் அந்த நாட்டின் கிரிக்கெட் போர்ட் திருப்தியாக வழியனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், உலகின் அதிகாரமிக்க பொருளாதார வலுமிக்க போர்ட் என கூறிக்கொள்ளும் பிசிசிஐ தங்களின் வீரர்களுக்கு திருப்தியான விடைபெறலை கூட உறுதி செய்துகொடுக்க மறுக்கிறது.
அஷ்வின் இப்போதுதான் ஓய்வை அறிவித்திருக்கிறார். மனம் திருந்தி அவருக்காவது எதாவது விழா எடுக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.