Jio New Recharge Plan Latest Updates: பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது எனலாம். கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகப்படுத்தியதன் விளைவாக, இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கினர். காரணம், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையையும் நாடு முழுவதும் தொடங்கியிருக்கிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதன் காரணத்தால் கடந்த சில மாதங்களாகவே பிஎஸ்என்எல் பக்கம் அதிகமானோர் வருகின்றனர்.
இருப்பினும் முன்னணி நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டு ஒரு சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் நீண்ட வேலிடிட்டியுடன் வரம்பற்ற சேவையை வழங்கும் வகையில் இந்த ரீசார்ஜ் திட்டம் வடிவமைகக்ப்பட்டுள்ளது. நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே சுமார் 100 நாள்களுக்கு இந்த சேவையை பெறலாம், இதன் விலையும் பட்ஜெட்டில்தான் வருகிறது. அந்த வகையில், ஜியோவின் இந்த புதிய திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஜியோவின் 98 நாள் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவில் தற்போது சுமார் 4.9 கோடி பயனர்கள் இருக்கின்றனர். இந்நிறுவனம் அத்தனை பயனர்களுக்கு நீண்ட வேலிடிட்டி கொண்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை 999 ரூபாய் ஆகும். இதன் வேலிடிட்டியும் 98 நாள்கள் ஆகும். அதாவது 98 நாள்களுக்கு நீங்கள் வரம்பற்ற மொபைல் காலிங் வசதியை மட்டுமின்றி எக்கச்சக்க டேட்டா பலன்களையும் பெறுவீர்கள்.
கிடைக்கும் சேவைகள்
ஆம் இந்த 999 ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 5ஜி இணைய சேவையையும் கிடைக்கும். அதாவது, நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருந்து, உங்கள் பகுதியில் 5ஜி இணைய சேவை இருக்கும்பட்சத்தில் அதிவேக இணைய சேவையை நீங்கள் வரம்பற்ற வகையில் அனுபவிக்கலாம். ஒரு டெஸ்ட் போட்டியை காலையில் பார்க்க தொடங்கினால், அது முடியும் வரையும் நீங்கள் தொடர்ச்சியாக எவ்வித தடங்களும் இன்றி சிறப்பான தரத்தில் பார்த்து மகிழலாம். 5ஜி இணைய சேவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது புகுந்துவிட்டது. 5ஜி ஸ்மார்ட்போன்களும் விதவிதமான மாடல்களில் தற்போது சந்தையில் குவிந்துள்ளது எனலாம்.
இதுபோக தினமும் உங்களுக்கு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அதன்மூலம், 98 நாள்களுக்கு மொத்தம் 196ஜிபி டேட்டா 4ஜி வேகத்தில் கிடைக்கும். ஒருநாளின் டேட்டா லிமிட் முடிந்துவிட்டால் 64kbps வேகத்தில் இணையம் கிடைக்கும். 999 ரூபாயில் 98 நாள்களுக்கு இத்தகைய இணைய சேவை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ கொண்டுவந்துள்ளது. ஜியோவின் இந்த திட்டத்தை பயனாளர்களுக்கு மேலும் பல நன்மைகள் உள்ளன. ஜியோ சினிமாவின் இலவச அணுகல் கிடைக்கும். ஆனால், பிரீமியம் அணுகல் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்க… ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவையும் இதில் கிடைக்கும்.