அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது நாடு தழுவிய அரசியல் சர்ச்சையாகி உள்ளது. அமித் ஷாவை ராஜினாமா செய்யச்சொல்லி எதிர்க்கட்சிகள் கோதாவில் குதிக்க, “நான் அம்பேத்கர் பற்றி பேசியதை காங்கிரஸ் திரித்து விட்டது” என்று சொல்லி இருக்கிறார் அமித் ஷா. அம்பேத்கர் கருத்து இத்தனை அமளிதுமளிகளை ஏற்படுத்துவது ஏன்?
டிசம்பர் 17-ம் தேதி மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, ” அம்பேத்கர்… அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று சொன்னது சர்ச்சையாக வெடித்தது.
அம்பேத்கர் சர்ச்சைக்குள் செல்வதற்கு முன்பு 2024-ல் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் ‘400 தொகுதிகள் நிச்சயம்’ என களமிறங்கிய பாஜகவுக்கு, தனிப்பெரும்பான்மைகூட கிடைக்கவில்லை. இதற்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், பட்டியலின மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பது முக்கிய விஷயமாக கோடிடப்பட்டது. ஏனென்றால், முந்தைய மக்களவைத் தேர்தல்களில் கணிசமான பட்டியலின, பழங்குடியின வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை அறுவடை செய்தது பாஜக.
அதனாலேயே பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை அடுத்தடுத்து ஜனாதிபதிகளாக்கி அழகுபார்த்தது.இந்த சூழலில்தான் 2024 தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இதற்கு ‘அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து’ என்ற இண்டியா கூட்டணியின் முழக்கமே முக்கிய காரணம். இதனால் ராமர் கோயில் எழுப்பப்பட்ட அயோத்தி தொகுதியிலேயே பாஜக தோற்றது. பொது தொகுதியான அயோத்தியில் வென்றது சமாஜ்வாதி கட்சியின் பட்டியலின வேட்பாளர்.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற பாஜக ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிகம் வென்றது. அதற்கு காரணமாகவும் பட்டியலின வாக்குகளே அமைந்தன. இதனை ஆர்எஸ்எஸ்-சும் தனது ஆய்வு மூலமாக பாஜக-வுக்கு அறிவுறுத்தியது. அதன்பின்னர் சுதாரித்த பாஜக, ஹரியானாவில் குமாரி சல்ஜா விவகாரம் மூலம் பட்டியலின வாக்குகளை கவர்ந்து வெற்றிபெற்றது. அதேபோல மகாராஷ்டிரா தேர்தலிலும் பட்டியலின வாக்குகளை உடைத்து வெற்றிபெற்றது.
இப்படி பாஜகவின் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் வலிமைமிக்கதாக பட்டியலின சமூகத்து வாக்குகள் மாறியிருக்கும் சூழலில், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. இது ஹரியானா, மகாராஷ்டிர தேர்தல் தோல்விகளால் மனமுடைந்து போயிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பூஸ்ட் ஆக மாறியிருக்கிறது. அதேபோல, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை வலுவாக கையில் எடுத்துள்ளன. ‘அம்பேத்கர்’ விஷயத்தை தேசம் முழுவதும் பேசுபொருளாகவும், போராட்ட வடிவமாகவும் மாற்றுவோம் என்கிறது காங்கிரஸ்.
இதையெல்லாம் சமாளிக்க, “காங்கிரஸ்தான் அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மறுத்தது, அவரின் படத்துக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்க மறுத்தது” என பிரதமர் மோடி காங்கிரஸின் பாவங்களை பட்டியலிட்டுள்ளார்.
அமித் ஷாவும் அம்பேத்கர் விஷயத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். ஆனபோதும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை உருவாக்கிய பட்டியலின வாக்குகளை மீட்டெடுக்க பல்வேறு ‘சோஷியல் இன்ஜினியரிங்’ வேலைகளை செய்துவரும் பாஜகவுக்கு, அமித் ஷாவின் பேச்சு இக்கட்டை உண்டாக்கி இருக்கிறது.
தேசிய அளவில் ஓபிசி வாக்கு வங்கிக்கு இணையாக பட்டியலின, பழங்குடியின வாக்குகள் தேர்தல் நிர்ணய ஆற்றலாக மாறியுள்ளது. இதற்காக பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு கட்சிகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில் தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்து பாஜகவும், காங்கிரசும் முட்டிமோத ஆரம்பித்துவிட்டன. தங்களது மாநிலங்களில் பாஜகவை முதன்மை எதிரியாக கொண்ட சமாஜ்வாதி, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இதைவைத்து அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துவிட்டன.
விரைவில் வரவிருக்கும் டெல்லி, பிஹார் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவுக்கு கிலி கொடுக்க இந்த ‘அம்பேத்கர் அஸ்திரம்’ பயன்படும் என்பது இவர்களின் கணக்கு. தமிழகத்திலும் பட்டியலின வாக்குகளை குறிவைத்து பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது, அதனால்தான் எல்.முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
இந்த சூழலில் அம்பேத்கருக்கு எதிரான அமித் ஷாவின் கருத்தால் தமிழக பாஜக-வும் கலக்கத்தில்தான் உள்ளது. அதனால் தான் தமிழக பாஜக தலைவர்கள் இந்த விஷயத்துக்கு தீவிரமாக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்பை உருவாக்கிய சிற்பி அம்பேத்கர் குறித்த விமர்சனம், பட்டியல் சமூகம் தாண்டி பொது சமூகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பாஜக எப்படி சமாளிக்கப்போகிறது என பார்ப்போம்?