அமெரிக்காவில் நடந்த அழகி போட்டி: 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற சென்னை பெண்

நியூயார்க்,

வாஷிங்டன் நியூ ஜெர்சியில் நடந்த 2024 மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தை சென்னையில் பிறந்த, இந்திய அமெரிக்க இளம்பெண் கேட்லின் சாண்ட்ரா பெற்றுள்ளார். நியூ ஜெர்சியில் இந்திய விழாக் குழு ஏற்பாடு செய்த மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. மற்றும் மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ., மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ. போட்டியானது நடைபெற்றது.

இப்போட்டியின் மூன்று பிரிவுகளில் 25 மாகாணங்களில்இருந்து 47 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 19 வயதான கேட்லின், மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. பட்டத்தைப் பெற்றார். சென்னையில் பிறந்த கேட்லின் கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் கேட்லின், மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஜொலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நம் சமூகத்தில் எப்போதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று கேட்லின் கூறினார்.

மேலும் இல்லினாய்சைச் சேர்ந்த சம்ஸ்கிருதி சர்மா ‘மிஸஸ் இந்தியா யு.எஸ்.ஏ.’ என்ற பட்டத்தையும், வாஷிங்டனைச் சேர்ந்த அர்ஷிதா கத்பாலியா ‘மிஸ் டீன் இந்தியா யு.எஸ்.ஏ.’ பட்டத்தையும் வென்றனர். இவர்களுக்கு ரிஜுல் மைனி, மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ. 2023 மற்றும் சினேகா நம்பியார், மிசஸ் இந்தியா யு.எஸ்.ஏ. 2023 ஆகியோர் முறையே மகுடம் சூட்டினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.