கரூர்: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சைக் கண்டித்து குளித்தலையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விசிகவினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சைக் கண்டித்தும், அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலையில் இன்று (டிச. 20ம் தேதி) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலை மறிப்பதற்காக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலையில் இருந்து ரயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணி அளவில் ஊர்வலமாக வந்தனர். ரயில் நிலைய நுழைவாயிலுக்கு முன்பே குளித்தலை போலீஸார் பேரிகார்டுகளை வைத்து அவர்களை தடுத்ததால் அங்கேயே கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1 பெண் உள்ளிட்ட 33 பேரை கைது செய்தனர்.
முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஎம்) கட்சி கரூர் மாநகரக்குழு சார்பில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு கரூர் மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில் காலை 11.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.