காபுல்,
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல்-கந்தஹார் நெடுஞ்சாலையில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்தனர் மற்றும் 76 பேர் காயமடைந்துள்ளனர் என்று கஜினி மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஹபீஸ் உமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நேற்று பிற்பகுதியில் காபுல்-கந்தஹார் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மற்றொரு சம்பவம் அதே நெடுஞ்சாலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரை இணைக்கும் பகுதியில் நடந்தது. இந்த இரண்டு விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கஸ்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள் காபுலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.
இந்த இரண்டு விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசமான சாலை நிலைமைகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சவாலான நிலப்பரப்புகள், அதிக சுமை மற்றும் வேகம் போன்ற காரணங்களால் ஆப்கானிஸ்தானில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.