ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்திற்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவு: கோயில் – மசூதி விவகாரத்தில் அறிக்கை

புதுடெல்லி: கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பாக்வத் கருத்துக்கு பரேலியின் முஸ்லிம் மவுலானா ஆதரவளித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் சம்பல் ஜாமா மசூதி, கோயில் இடித்துக் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் பல மசூதிகள் மற்றும் அஜ்மீர் தர்கா, கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகப் புகார்கள் கிளம்பின.

இதன் மீது நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். இவற்றை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கடந்த வாரம் தடை விதித்தது. இந்த வழக்கு மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 மீது தொடுக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோஹன் பாக்வத், புனேவின் ஒரு இந்துத்துவா கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர், அயோத்யாவில் ராமர் கோயில் கட்டப்பட்ட பின் கோயில்-மசூதி மீதானப் புதிய விவகாரங்களுக்கு இனி இடமில்லை என தெரிவித்திருந்தார். இந்துக்களின் தலைவர்களாக தம்மை முன்னிறுத்த சிலர் இச்செயலை செய்வதாகவும் கண்டித்திருந்தார்.

இந்துத்துவாவின் முக்கியத் தலைவரான மோஹன் பாக்வத்தின் கருத்திற்கு உபியின் பரேலியிலுள்ள முஸ்லிம் மவுலானா ஆதரவளித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவரான அவர் இதன் மீது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா முப்தி சஹாபுத்தீன் ரிஜ்வீ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில சமூக விரோதிகள் நாட்டின் ஒவ்வொரு மசூதிகளின் கீழே கோயில்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இதன் மீதான வழக்குகளும் நீதிமன்றங்களில் குவியத் துவங்கி விட்டன.

நல்லவேளையாக இவற்றின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்காக இறைவனுக்கு நன்றி. நாட்டின் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களின் இந்து தலைவர்களாகி விட போட்டி நடைபெறுகிறது.

இவர்களுக்கு தற்போதைய நிலையின் மீது அக்கறை இல்லை. இதுபோன்றவர்களால் நம் நாட்டின் அமைதியும், மதநல்லிணக்கமும் குலைக்கப்படுகிறது.

இந்து – முஸ்லிம்களுக்கு இடையே உள்ள சகோதரத்துவத்தின் நிலையும் பாதிக்கப்படுகிறது. இதன் மீது ஆர்எஸ்எஸ் தலைவர் ஒரு நல்ல கருத்தைக் கூறியுள்ளார். கோயில் – மசூதி விவகாரங்களை இந்து தலைவர்களாவதற்காக யாரும் எழுப்பக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனைகளால் முஸ்லிம்கள் அமைதியின்றி இருப்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் உணர்ந்துள்ளார்.

இதே பிரச்சினைகளால் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் சர்வதேச அளவில் களங்கப்படும் எனவும் அவர் புரிந்து கொண்டார். இதை நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை நடத்தும் விஷ்ணு சங்கர் ஜெயின், ஹரி சங்கர் ஜெயின் மற்றும் ராக்கி சிங் உள்ளிட்டோர் புரிந்து கொள்வது அவசியம்.

இனி அவர்கள் இந்து – முஸ்லிம் விவகாரங்களை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். அனைவரும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவது இப்போதைய தேவை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.