உகாண்டாவில் வேகமாக பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்: உடல் நடுக்கம் காரணமாக நடனமாடுவது போன்ற பாதிப்பு

உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிக அளவில் பெண்கள், குழந்தைகளை தாக்குவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருக்கின்றனராம்.

கரோனாவை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று உகாண்டாவில் பரவி வருகிறது.

உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் `டிங்கா டிங்கா’ என அவர்கள் நாட்டில் குறிப்பிடப்படும் மர்ம வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து தாக்குகிறது. அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்கள் இவற்றின் முதன்மையான அறிகுறிகளாக உள்ளன. இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடனம்: மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள்(ஆன்டிபயாடிக்) கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

டேன்சிங் பிளேக்: இதேபோன்று கடந்த 1518-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் பிளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் காரணமாக சிலர் ஆடிக்கொண்டே இருப்பதால் இதற்கு டேன்சிங் பிளேக் காரணமோ என்று சிலர் அச்சத்தில் உள்ளனர்.

அறிகுறிகள் என்ன? – இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடற்ற உடல் நடுக்கம் ஏற்படுகிறது. மேலும், அவர்களுக்கு உடல் நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் நடனமாடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் பலவீனம் அடையும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலர் பக்கவாதத்தை உணர்வை கொண்டுள்ளனர். அவர்களால் சிறிது தூரம் நடக்க முடிவதில்லை.

ஆன்டிபயாடிக்: இதுகுறித்து புண்டிபுக்யோ மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் கியிடா கிறிஸ்டோபர் கூறியதாவது: தற்போது இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆன்டி-பயாடிக் மருந்துகளை மட்டுமே அளித்து வருகிறோம். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைச்சாலைக்கு அனுப்பியுள்ளோம். நோயால் பாதிக்கப்படும் நபர்கள் சுமார் ஒரு வார காலத்தில் தேறி விடுகின்றனர். சிலர் மூலிகை வைத்தியம் மேற்கொள்கின்றனர்.

ஆனால், சரிபார்க்கப்படாத மூலிகை மருந்துகளை நம்புவதற்குப் பதிலாக மாவட்ட சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற உள்ளூர் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எதனால் பாதிப்பு? – இந்த டிங்கா டிங்கா வைரஸ் ஏற்படுவது எப்படி என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த நோய் வருவது எப்படி என்பது குறித்து இதுவரை அறியமுடியவில்லை. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருவகையான பரவும் வகையிலான வைரஸ் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.