மாஸ்கோ,
நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா, ரஷியா போன்றவை ஆதரவாக செயல்படுகின்றன.
தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து ரஷியா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷியா படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷியா – உக்ரைன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, இங்கிலாந்து தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன், ரஷியா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷியா, உக்ரைன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரைன், ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும், உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாக ஊடங்கங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.