புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைத்தார். இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை உறுப்பினர்கள் 27 பேர், மாநிலங்களவை உறுப்பினர் 12 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் (129 வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேசங்கள் திருத்தம் மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் டிச.17ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது இந்த சட்டம் மாநிலங்கள் அனுபவிக்கும் சலுகைகளை சீர்குலைக்காது என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் இந்த நகர்வை சர்வாதிகாரம் என்று அழைத்தன.
மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்திருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.” என கூறி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தர்மேந்திர யாதவ் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாஜக சர்வாதிகாரத்தை கொண்டு வர முயற்சிக்கிறது.” என்று தெரிவித்தார்.
இதனிடையே ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, “இந்த மசோதா அரசியல் ஆதாயம் மற்றும் வசதிகளை நோக்கமாக கொண்டுள்ளது. இது பிராந்திய கட்சிகளை அழித்துவிடும்” என்று தெரிவித்திருந்தார்.