Border Gavaskar Trophy Series Latest Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இதனால், தொடரை கைப்பற்றப்போவது யார், 2025 ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (ICC World Test Championship Final 2025) தகுதிபெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
இந்திய அணி (Team India) முதல் போட்டியில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளாக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்தது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் அனைத்து வீரர்களும் உள்ளனர். தற்போது அஸ்வினும் (Ravichandran Ashwin) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு தொடருக்கு நடுவே தாயகம் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம்.
என்ன செய்யப்போகிறது இந்திய அணி?
மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களில்தான் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் நாள்கள் செல்ல செல்ல சுழற்பந்துவீச்சும் கைக்கொடுக்கும் அந்த வகையில், மெல்போர்ன், சிட்னியில் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் இல்லாததால், அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) இறங்குவாரா அல்லது ரவீந்திர ஜடேஜாவுக்கே (Ravindra Jadeja) மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரும் ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஆதிக்கத்தை தொடருமான ஆஸ்திரேலிய அணி?
இந்திய அணி ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலிய அணியும் (Team Australia) தொடரை கைப்பற்ற பெரியளவில் முயன்று வருகிறது. கடந்த இரண்டு முறை சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைக்கும் ஆஸ்திரேலியா முனைப்பு காட்டுகிறது. ஆஸ்திரேலியாவே தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றாலும் அந்த அணியிலும் சில ஓட்டைகள் இருக்கின்றன. ஹேசில்வுட் காயமடைந்தாலும் ஸ்காட் போலண்ட் அவரது இடத்தை அருமையாக நிரப்பிவிடுவார்.
ஆனால், ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் வீரர்கள், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இந்த தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கூட ஓரளவுக்கு பங்களிப்பை செலுத்தியிருப்பதால் அவர்கள் அணியில் தொடர்வதில் சந்தேகமே இருக்காது. பிளேயிங் லெவனில் மிட்செல் மார்ஷிற்கு பதில் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி நிலவி வருகிறது.
மெக்ஸ்வீனிக்கு டாட்டா
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனராக களமிறங்கிய இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி (Nathan McSweeney) கடந்த 3 போட்டிகளில் அதாவது 6 இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்து 72 ரன்களையே அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 39 ரன்களை அடித்துள்ளார். அவரது சராசரி 14.40 ஆக உள்ளது. மேலும் அவர் தொடர்ந்து பும்ராவுக்கு எதிராக தடுமாறி வருகிறார். 4 இன்னிங்ஸ்களில் அவர் பும்ராவிடமே தனது விக்கெட்டை இழந்துள்ளார். அனுபவ வீரர் கவாஜாவும் பெரியளவில் சோபிக்காதது இவர் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது.
யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
எனவே, மெக்ஸ்வீனியை ஸ்குவாடில் இருந்து கழட்டிவிட்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 19 வயதே ஆன சாம் கான்ஸ்டாஸ் (Sam Konstas) என்பவரை அணியில் சேர்த்துள்ளது. இவர் மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கவாஜா உடன் ஓப்பனிங்கில் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். வலது கை வீரரான இவர், சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தார்.
அதாவது, முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் இடையே, இந்திய அணி கான்பெராவில் ஆஸ்திரேலியாவின் Prime Minister’s XI அணியுடன் பகலிரவாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் கான்ஸ்டாஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 107 ரன்களை குவித்தார். இருப்பினும் இந்த போட்டியில் அவர் பும்ராவை எதிர்கொள்ளவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
அதுமட்டுமின்றி இந்திய ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த 73* ரன்கள் ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவினர் ஈர்த்திருக்கிறது எனலாம். ஒருவேளை இவர் ஆஸ்திரேலிய அணிக்கு பலமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் மிடில் ஆர்டர் பேட்டர்கள் அணியின் ஸ்கோரை பெரியளவுக்கு எடுத்துச் செல்வார்கள் எனலாம். சாம் கான்ஸ்டாஸ் முதல் தர போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 718 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள், 2 சதங்களும் அடக்கம். அதிகபட்சமாக 152 ரன்களை அடித்துள்ள இவரது சராசரி 42.23 ஆக உள்ளது.