கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு மகள்கள். கணவன், மனைவி இருவரும் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், சிறுமிகள் இருவரும் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் இந்தியாவுக்குத் திரும்பி, தங்கள் மகள்களுடன் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். தந்தை அதே கிராமத்தில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். அதையடுத்த சில மாதங்களில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்திருக்கிறார் சிறுமிகளின் தாய்.
சில நாட்கள் அமைதியாக இருந்த அந்த தந்தை, அதன் பிறகு தன்னுடைய கொடூர முகத்தை மகள்களிடம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், “முதலில் தன்னுடைய மூத்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, `இதெல்லாம் தப்பில்லை…’ என்று கூறி மகளைச் சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார். அதற்கும் மூத்த மகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாக அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.
இதுகுறித்து யாரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்த அந்த சிறுமி, தன்னுடைய தங்கையிடம் கூறியிருக்கிறார். அப்போது, அப்பா தன்னையும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் கூற, அதிர்ந்து போயிருக்கிறார் மூத்த மகள். இந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் தவித்திருக்கின்றனர் தாயை இழந்துவிட்ட அந்த சிறுமிகள். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்த சிறுமிகள், கடந்த 2021-ம் ஆண்டு எங்களிடம் வந்தார்கள்” என்றனர்.
சிறுமிகள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவர்களிடம் புகாரை பெற்று போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். அதனடிப்படையில் சிறுமிகளின் தந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில் நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று முன் தினம் வழங்கிய தீர்ப்பில், “சிறுமிகளின் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. அதனால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,10,000/- லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.