கார்த்தி நடித்த ‘சகுனி’, செந்தில், யோகிபாபு இணைந்து நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படங்களின் இயக்குநர் சங்கர் தயாள், மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த 2012ல் ‘சகுனி’ வெளியானது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து, இப்போது தான் ஒரு படத்தை இயக்கி முடித்தார்.
சமீபத்தில் தான் அதன் டீசரும் வெளியானது. நடிகர் கார்த்தி அதனை வெளியிட்டிருந்தார். விரைவில் அதனை திரைக்குக் கொண்டு வரும் வேலைகளில் தீவிரமாக இருந்தார் சங்கர் தயாள். இந்நிலையில் தான் அவர் காலமானார். அவரது திடீர் மறைவு குறித்து ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த செந்தில், இங்கே உருக்கமும் நெருக்கமுமாக அவரது நினைவுகளை பகிர்கிறார்.
”இப்போது தான் அவரது இறுதிசடங்கில் பங்கேற்று திரும்பினேன். மனது கனக்கிறது. அருமையான இயக்குநர். என் மீது ரொம்பவும் மரியாதை வைத்திருப்பவர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பார். யாரிடமும் கோபப்பட்டு பேசமாடட்டார். எல்லோரிடமும் அன்பாக பேசி வேலை வாங்குவார். காமெடி சென்ஸ் மிக்கவர்.
வசனங்களை அழகுபட சொல்லிக் கொடுப்பார். அன்றைய டிரெண்ட்டில் உள்ள விஷயங்களையே டயலாக்குகளாக எழுதிவிடுவார். ஸ்பாட்டில் தான் வசனங்களை எழுதுவார். அவரது இயக்கத்தில் நடித்தது, மறக்க முடியாத தருணங்களாகி விட்டது. அவரது மறைவு திரையுலகிற்கு இழப்புதான். ஒரு நல்ல மனிதரை தமிழ் சினிமா இழந்து நிற்கிறது.” என்கிறார் செந்தில்.