நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கிராமங்களில் சுமார் 19 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 15 கோடி குடும்பங்களுக்கு (79%) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நாடு முழுவதும் இன்னும் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் குறைந்த அளவாக 53.9% வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல, கேரளா (54.13%), ஜார்க்கண்ட் (54.62%), ராஜஸ்தான் (54.95%) ஆகிய மாநிலங்களும் குழாய் இணைப்பு வழங்குவதில் பின்தங்கி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.