ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்​தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்​பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இந்த லாரி​யில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்​பூரின் பாங்க்​ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே​ உள்ள வளைவில் சென்ற​போது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் பயங்கர வேகத்தில் மோதி​யது.

இதில் டேங்கர் மூடி திறந்து கொண்டதில், சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு காஸ் பரவியது. லாரியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் வரை அடர்ந்த பனிமூட்டம் போல காஸ் சூழ்ந்தது. இந்த நிலையில், டேங்கர் லாரி பயங்கர சத்தத்​துடன் வெடித்​து சிதறியது. சாலை​யில் அதன் அருகே நின்​றிருந்த 40-க்​கும் மேற்​பட்ட வாகனங்களும் அடுத்தடுத்து தீப்​பிடித்து எரிந்தன. டேங்கர் லாரிக்கு அருகே தனியார் சுற்றுலா சொகுசு பேருந்து நின்​றிருந்​தது. அதில் 34 பயணிகள் இருந்​தனர். அந்த பேருந்து முழு​மையாக தீப்​பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில், பேருந்து பயணிகள், அருகே இருந்த வாகனங்​களின் ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் உடல் கருகிஉயிரிழந்​தனர். பலத்த தீக்​கா​யம் அடைந்த 35 பேர், மருத்​துவ​மனை​களில் சேர்க்​கப்​பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த 14 பேரை காணவில்லை. தீ விபத்தில் அவர்களும் உயிரிழந்​திருக்கலாம் என்று அஞ்சப்​படு​கிறது.

ரூ.7 லட்சம் இழப்​பீடு: விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ராஜஸ்​தான் முதல்வர் பஜன்​லால் சர்மா சம்பவ இடத்​துக்கு வந்து பார்வையிட்டார். மருத்​துவ​மனை​களில் சிகிச்சை பெறு​பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும். காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று முதல்வர் பஜன்​லால் சர்மா அறிவித்​துள்ளார்.

பிரதமர் மோடி சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: ஜெய்ப்​பூர்- அஜ்மீர் நெடுஞ்​சாலை​யில் ஏற்பட்ட விபத்​தில் உயிரிழந்​தவர்​களின் குடும்பங்​களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி​வித்துக் கொள்​கிறேன். தீக்காயமடைந்தவர்கள் விரை​வில் குணமடைய பிரார்த்திக்​கிறேன். விபத்​தில் உயிரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்​கப்​படும். காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 வழங்​கப்​படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்ளார்.

உயிரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு மத்திய அரசு சார்​பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்​பில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் நிவாரண உதவி வழங்​கப்பட உள்ளது. காயமடைந்​தவர்​களில் சுமார் 15 பேரின் நிலைமை கவலைக்​கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்​கூடும் என்று அஞ்சப்​படு​கிறது.

காஸ் கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக சுமார் ஒரு கி.மீ. தூர எல்லைக்குள் பறந்து கொண்​டிருந்த நூற்றுக்​கணக்கான பறவை​களும் உயிரிழந்​துள்ளன. நெடுஞ்​சாலை அருகே உள்ள சில ஆலைகளிலும் தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்​டுள்ளது. விபத்து நேரிட்ட பகுதி​யில் சுமார் 4 பெட்​ரோல் பங்க்குகள் உள்ளன. சுமார் 100 மீட்டர் தூரத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்​லும் ராட்சத குழாய் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அவை பாதிக்கப்படவில்லை.

டேங்கர் லாரி ஓட்டுநரின் கவனக்​குறைவால் விபத்து ஏற்பட்​டிருப்பது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்துள்ளது. அவர் உடல் கருகி உயிரிழந்​து​விட்​டார். அவரது எலும்​புக்​கூடு மட்டுமே மீட்கப்​பட்டுள்ளது என்று ஜெய்ப்​பூர் போலீ​ஸார் தெரி​வித்​தனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறிய​தாவது: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வர தாமதமானது. காற்றில் சமையல் காஸ் கலந்ததால் சுமார் ஒரு கி.மீ. தொலை​வுக்கு தீ பிடித்து எரிந்​தது. சொகுசு பேருந்​தில் இருந்த பயணிகள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பினர். அவர்​களில் பலர் தீப்​பிடித்த ஆடைகளை களைந்து எறிந்​து​விட்டு தப்பி ஓடினர். வழிநெடுக நின்​றிருந்த வாகனங்​களும் அடுத்​தடுத்து தீப்​பிடித்து எரிந்தன. சுமார் ஒரு மணிநேரத்துக்கு வாகனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறிக்கொண்டே இருந்தன.

மனிதர்கள் மட்டுமன்றி விலங்​கு​கள், பறவை​களும் சாலை​யில் உயிரிழந்து கிடந்தது பரிதாபமாக இருந்தது. சாலை​யின் இருபுற​மும் இருந்த மரங்கள் எரிந்து சாம்​பலாகி​விட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.