புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று உத்தவ் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) உத்தவ் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 2019 மகாராஷ்டிர தேர்தலில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியின் முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். இந்நிலையில், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் வெளியேறிய எம்எல்ஏக்கள் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தனர். அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்விஏ படுதோல்வி அடைந்தது. இனால் உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரேவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. காங்கிரஸுடன் இணைந்து தம் இந்துத்துவா கொள்கைகளை ஒதுக்கி வைத்ததும் இதன் முக்கியக் காரணமாக எண்ணுகிறார் உத்தவ். எனவே, அவர் மீண்டும் என்டிஏவில் இணையத் தயாராவதாகப் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இந்த இணைப்பிற்காகவே தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக ஓரங்கட்டுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘என்டிஏவில் இருந்து வெளியேறிய உத்தவுடன் பாஜக தலைவர்களின் மோதல் வலுத்திருந்தது. இதன் காரணமாகவே சட்டப்பேரவை தேர்தலில் எம்விஏ கூட்டணியில் உத்தவ் தொடர்ந்தார். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அவரை மீண்டும் பாஜக பக்கம் சாய வைத்துள்ளது. இனி அவரை என்டிஏவில் சேர்ப்பதா வேண்டாமா என்பதை பிரதமர் மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் முடிவு செய்ய வேண்டும்.
இதற்கு உத்தவின் தந்தையும் சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரேவுடன் இருந்த நட்பு உதவும்’’ என்றனர்.
என்டிஏவுக்கு உத்தவ் மீண்டும் வந்தால், ஏக்நாத் ஷிண்டேவிடம் உத்தவ் இழந்த சிவசேனாவும் மீட்கப்படும் எனக் கருதப்படுகிறது. இதுதொடர்பாகவும் முதல்வர் பட்னாவிஸுடன் உத்தவ் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூரில் நடந்ததும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.