மகாராஷ்டிர சட்ட மேலவையின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ராம் ஷிண்டே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர சட்ட மேலவையின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாயக் நிம்பல்கர் இருந்தார். இவரது பதவிக்காலம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நிறைவடைந்தது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பதவி காலியாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், சட்ட மேலவைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் ஸ்ரீகாந்த் பார்தியா, உமா காப்ரே மற்றும் சிவாஜிராவ் கார்ஜே ஆகியோர் பாஜகவைச் சேர்ந்த ராம் ஷிண்டே பெயரை முன்மொழிந்தனர். மணிஷா காயந்தே, அமோல் மிட்கரி மற்றும் ஞானேஸ்வர் மாத்ரே ஆகியோர் வழிமொழிந்தனர். இப்பதவிக்கு யாரும் போட்டியிடாததால், ராம் ஷிண்டே போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே ஆகியோர் ராம் ஷிண்டேவை அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு முதல்வர், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், கர்ஜத் ஜம்கேத் தொகுதியில் போட்டியிட்ட ராம் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) வேட்பாளர் ரோஹித் பவாரிடம் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.