கேப்டவுன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஹென்ரிச் கிளாசென் மட்டும் போராட மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவர்களில் 248 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக தனி ஆளாக போராடிய கிளாசென் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் விரக்தியடைந்த கிளாசென் ஸ்டம்புகளை மிதித்தார். இது குறித்து கள நடுவர் ஐ.சி.சி.-யிடம் முறையிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. விதிமுறை 2.2-ஐ மீறிய கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.