வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது .
இப்படத்தில் சூரி கதை நாயகனான குமரேசன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இரண்டாம் வெளியாகியிருக்கிறது. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜின் ‘மாமன்’ திரைப்படத்தின் திருச்சி படப்பிடிப்பில் இருக்கும் சூரி, இதன் முதல் காட்சியின் வரவேற்பைக் காண திருச்சியிலுள்ள திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “முதல் பாகம் எப்படி எல்லோருக்கும் பிடித்திருந்ததோ, அதுபோல இரண்டாம் பாகமும் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். கமர்ஷியல் படத்தைத் தாண்டி, மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது. படம் எல்லோருக்குள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார். ரசிகர்கள் கூட்டம் சூரியை அடுத்த தளபதி, சூப்பர் ஸ்டார் எனக் கூச்சலிட, அதற்கு சூரி, “எதையாவது சொல்லி உசுப்பேத்திவிடாதிங்க. நான் எப்போதும் உங்களில் ஒருவன்தான்” என்று சிரிப்புடன் பதிலளித்தார்.