மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் டியூப் வெடிப்பு மற்றும் விபத்து காரணமாக மின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, அனல் மின் நிலையத்தில் 87 சதவீதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 சதவீதம் மட்டுமே நடந்து வருகிறது
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் கொண்ட 4 அலகுகளில் மொத்தம் 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் முதல் பிரிவில் 3-வது அலகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, 3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளது. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 2-வது அலகில் 45 நாட்கள் பராமரிப்பு பணி நடந்து வருவதாலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முதல் பிரிவின் முதல் அலகில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.
அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்தன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், ஊழியர்கள் சரி செய்த பிறகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2-வது பிரிவில் இன்று (டிச.21) காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, அனல் மின் நிலையத்தில் 87 சதவீதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 சதவீதம் மட்டுமே நடந்து வருகிறது.
இருவர் உயிரிழப்பு: முன்னதாக, சேலம் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டிச.19 மாலை நிலக்கரி சுமைப்பான் (Coal Bunker) ஒன்று எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வரின் ஆணைப்படி, விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.