திருவண்ணாமலை: 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க சென்னையில் விரைவில் நடைபெற உள்ள போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க உழவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் சனிக்கிழமை (டிச.21) மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை வகித்தார். மாவட்ட பாமக செயலாளர்கள் அ.கணேஷ்குமார், ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், ஆ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி வரவேற்றார்.
இதையடுத்து தமிழ்நாடு உழவர் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றும்போது, “இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் உள்ளது. பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்காததால், தனி நபர்களிடம் வட்டிக் கடன் பெற்று, கடனை அடைக்க முடியாமல், கடனில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தொழில் மயமாக்கல் என்ற பெயரில் விளை நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது. தொழில் வளர்ச்சி முக்கியம்தான். அதற்காக, விளை நிலங்களை அழிக்கக் கூடாது.
உழவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. உழவர்கள் நலனுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளி கொடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் மாறிவிட்டார். உழவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடுமையான அரசுதான் திமுக அரசு.
உழவர்களை பாதுகாக்காதவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்கக் கூடாது. ஏர் பிடித்த உழவர்களிடம் போர் குணம் திகழ வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் மேலாண்மை கீழ் நிலையில் உள்ளது. தண்ணீர், மணல் கொள்ளையை தடுத்து தாமிரபரணி உட்பட 5 ஆறுகளை பாதுகாக்க வேண்டும். 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க, சென்னை போர் நினைவு சின்னத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு உழவர்களை அழைக்கிறேன். குடும்பத்துடன் விவசாயிகள் திரள வேண்டும். 2025-ம் ஆண்டு ஜனவரியில், இதற்கான தேதியை அறிவிக்கின்றேன்” என்றார்.
பாமக கவுரவத் தலைவர் கோ.க.மணி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் கவிஞர் திலகபாமா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.அருள், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ச.சிவக்குமார், எஸ்.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.