பெர்லின்: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு குழந்தை உள்பட இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.
இது குறித்து ஜெர்மன் போலீஸார் கூறுகையில், மேக்டேபர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் ஒன்று தாறுமாறாக ஓடியதில் 2 பேர் கொல்லப்பட்டர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் அந்தக் காரை ஓட்டிவந்தார். அவர் ஓட்டிவந்த பிஎம்டபிள்யு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் மட்டுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானதால் இனி வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்துவந்தார். ” என்றார்.
இந்த தாக்குதல் குறித்து ஜெர்மன் பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மேக்டேபர்க் சம்பவத்துக்கு கண்டனங்கள். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நெருக்கடியான நேரத்தில் பாதுகாப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர்… 8 ஆண்டுகளுக்கு முன்னர் அனீஸ் அம்ரி என்ற டுனீசியவைச் சேர்ந்த அகதி ஒருவர் பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் டிரக்கை செலுத்தி 12 பேரைக் கொன்ற சம்பவம் நினைவு கூரத்தக்கது. அதே பாணியில் இப்போது ஒரு தாக்குதல் நடந்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு சவுதி வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, ஜெர்மனி மக்களோடு தோளோடு தோள் நிற்போம் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வன்முறையை நிராகரிப்பதில் சவுதி அரசு உறுதியாக இருக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்துகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.