“டிகே சிவக்குமார், ஹெப்பல்கரால் என் உயிருக்கு ஆபத்து” – சி.டி.ரவி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பல்கர் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மேலவை உறுப்பினர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான கடந்த 19-ம் தேதி, சட்ட மேலவையில் பேசிய பாஜக உறுப்பினர் சி.டி. ரவி, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். பெலகவியில் கைது செய்யப்பட்ட சி.டி. ரவி, பின்னர் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. ரவி, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எனக்கு போதுமான ஆதரவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். டி.கே.சிவகுமாரும், லட்சுமி ஹெப்பல்கரும் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் ஏதோ ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எனக்கு எதிராக பதியப்பட்டுள்ள முழு வழக்கு குறித்தும் போலீஸார் என்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு வந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் குறித்து விசாரிக்க வேண்டும். எனது ஃபோன் கண்காணிக்கப்படுகிறது. அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதனிடையே, சட்ட மேலவையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு மேலவை தலைவர் பசவராஜ் ஹொராட்டிக்கு, மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். “சட்ட மேலவையில் லக்ஷ்மி ஹெப்பால்கருக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பேசியதன் மூலம் சி.டி. ரவி, பெண்களையும் அவர்களின் கண்ணியத்தையும் அவமதித்துள்ளார். முன்னாள் அமைச்சரான சி.டி. ரவி, பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். மிக உயர்ந்த ஒரு அவையில் தரம் தாழ்ந்த கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் சி.டி. ரவி, நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும், கண்ணியத்தையும் அவமதித்துவிட்டார்.” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.