நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13,14-ம் தேதிகளில் பெய்த கன மழையால், 5,768 ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் கடந்த 17-ம் தேதி வரை 290.10 மி.மீ மழை பெய்துள்ளது. இது டிசம்பர் மாத வளமையான மழையளவான 116.60 மி.மீ-ஐ விட 148 சதவீதம் அதிகமாகும். இதுபோல், கடந்த நவம்பர் மாதத்தில் 177.70 மி.மீ மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவான 208.20 மி.மீ-ஐ விட 14.64 சதவீதம் குறைவாகும்.
சாகுபடி பரப்பு அதிகரிப்பு: மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 56,313 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக் கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு 11,827 ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இவற்றில் சிறுதானியங்கள் – 24 சதவீதம், எண்ணெய் வித்துப் பயிர்கள் – 160 சதவீதம், பயறு வகைகள் – 10 சதவீதம், பழவகைகள் – 23 சதவீதம் மற்றும் காய்கறி பயிர்கள் – 21 சதவீதம் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.
மழையால் பயிர் பாதிப்பு: மாவட்டத்தில் நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெய்த கனமழையால், 410.50 ஹெக்டேரில் நெற்பயிர், 5,170 ஹெக்டேரில் உளுந்து மற்றும் பயறுவகை பயிர்கள், 141.7 ஹெக்டேரில் வாழை, 25 ஹெக்டேரில் மக்காச்சோளம், 1.8 ஹெக்டேரில் எள்ளு, 0.48 ஹெக்டேரில் கரும்பு, 14 ஹெக்டேரில் சிறுகிழங்கு, 3.49 ஹெக்டேரில் சேனைக் கிழங்கு, 3.77 ஹெக்டேரில் சேப்பங்கிழங்கு, இதர தோட்டக்கலை பயிர்கள் என்று மொத்தம் 5,768 ஹெக்டேரில் பல்வேறு வகை பயிர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக, வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
பயிர்ச் சேத விவரங்கள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினரால் கூட்டு புல தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சேத விவர அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல், பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்று வழங்கிடும் பொருட்டு, உடனடியாக பயிர் அறுவடை பரிசோதனைகளை முடிக்கவும் பயிர்க் காப்பீட்டு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிவாரணம்: மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையின்போது பாதிக்கப்பட்ட 7588.69 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு ரூ. 8.93 கோடியும், 389.39 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 6.86 லட்சமும் பயிர்ச்சேத நிவாரணத் தொகையாக அரசிடம் இருந்து பெற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் பிசான பருவத்தில் 904.10 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிருக்கும், 6,714 ஹெக்டேர் உளுந்து பயிருக்கும். 28 ஹெக்டேர் பாசிப்பயறு பயிருக்கும், 265 ஹெக்டேர் மக்காச்சோள பயிருக்கும் இதுவரை பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கோடை பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய ஜனவரி 31-ம் தேதியும், தோட்டக்கலைப் பயிர்களான வாழைக்கு வரும் பிப்ரவரி 28-ம் தேதியும், வெண்டைக்கு பிப்ரவரி 15-ம் தேதியும் கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.