முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற, விமானப் படையின் எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் வெலிங்டனுக்கு 10 கி.மீ. தொலைவுக்கு முன் விபத்துக்குள்ளானது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் அதிக மேகமூட்டம் இருந்ததால் ஹெலிகாப்டர் மலையில் மோதியது. இதில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்ததில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 13-வது பாதுகாப்பு திட்ட காலத்தில் மொத்தம் 34 ராணுவ விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 16 விபத்துகளுக்கு விமானி தொடர்பான மனிதப் பிழை காரணமாக உள்ளது. ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்த எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும் இதில் அடங்கும்.
இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு 7 விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. வெளிநாட்டு விமான பாகம் சேதம் அடைந்தது, பராமரிப்பு தொடர்பான மனிதப் பிழை ஆகியவை தலா 2 விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. பறவை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு விபத்து விசாரணையில் உள்ளது.
விமானப் படையில் மிக்-21 ரக விமானம் அதிகபட்சமாக 10 விபத்துகளை சந்தித்துள்ளது. இதையடுத்து ஜாகுவார், கிரண் ரக விமானங்கள் விபத்துகளை சந்தித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.