“மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி” – ஐநாவில் நடந்த முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

நியூயார்க்: மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21-ம் தேதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து முதல் உலக தியான தினம் இன்று உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நியூயார்க்கவில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டத்தின் தொடக்க அமர்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர், “இன்று தியானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமான ஒன்று. மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி. பல் சுகாதாரம் (Dental Health) இருப்பது போல் மனதுக்கான சுகாதாரமும் (Mental Health) உள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை உணர்கிறார்கள். அவர்கள் உலகத்தை மகிழ்ச்சியாக வைக்கிறார்கள். மன ரீதியிலான பிரச்சினை என்பது உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஒருபுறம் தீவிர பதட்டம் மறுபுறம் தீவிர மனச்சோர்வு என மனநல நெருக்கடி நம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒருபுறம், நமது இளைஞர்கள் ஆக்ரோஷமான நடத்தைக்கு உள்ளாகிறார்கள். மறுபுறம், மனச்சோர்வுடன் உள்ளார்கள்.

இதுபோன்று இரண்டு எல்லைகளை நோக்கி இல்லாமல் நாம் அதிக மையத்தில் இருக்க தியானம் உதவுகிறது. எந்த ஒரு நாகரிக சமுதாயத்திற்கும் உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இருப்பது முக்கியம். நாம் நம்மைப் பற்றியும், சக உயிரினங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலைப் பற்றியும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தியானம் நமது சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் இருந்து விலகி இருக்க தியானம் நமக்கு உதவுகிறது.

எனவே, இன்று தியானம் மிகவும் அவசியமானது. ஆடம்பரமானது அல்ல. தியானம் செய்வதற்காக மக்கள் மலைகளைத் தேடியும் கடற்கரைகளைத் தேடியும் சென்றார்கள். ஆனால், இன்று தியானம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தியானம் என்ற இயக்கத்தை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்திய அரசு அறிவித்தது. ஒரு சதவீத மக்கள் அமைதியற்ற நிலையில் இருந்தால் அவர்கள் மற்ற அனைவரையும் அமைதியற்றவர்களாக மாற்றுவார்கள். அதேபோல், ஒரு சதவீத மக்கள் தியானத்தில் ஈடுபட்டு உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இயங்கினால் அதன் பலன்களை நம்மால் கணக்கிடவே முடியாது.

சுற்றுச்சூழல் மேம்படும், தொடர்புகள் மேம்படும் இன்னும் பல நூறு நன்மைகள் கிடைக்கும். எல்லையில் நிற்கும் ராணுவ வீரராக இருந்தாலும், வீடுகளில் நடக்கும் குடும்ப வன்முறையாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சூழல் மேம்படும். சமரச தீர்வுக்கான மேஜை அருகே அமர்பவர்கள், முதலில் தியானத்தில் ஈடுபட்டால் மிகப் பெரிய நன்மைகள் விளையும்.

உடல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக சிலரால் யோகா செய்ய முடியாமல் போகலாம். ஆனால், தியானம் எங்கேயும் எப்போதும் எல்லோராலும் மேற்கொள்ள முடியும். மன ரீதியாக கட்டுப்பாடுகளை வைத்திருப்பவர்களுக்கு சர்வதேச தியான தினம் மிகப் பெரிய கதவை திறந்து வைக்கிறது. தியானத்துக்கு நாடு, இனம், வயது என எந்த எல்லையும் இல்லை. அனைத்து எல்லைகளையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, தியானம் பல வழிகளில் மிக மிக பயனுள்ளது. தியானம் செய்வது கடினம் என பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், தியானம் மிக எளிதானது. அது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. முயற்சி இல்லாமல் செய்யக்கூடியது. மனபதற்றம், பயம், தனிமை உணர்வு போன்றவற்றில் இருந்து நம்மை விடுவிக்கிறது” என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டார்.

உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள் தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

உலக தியான தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் விடுத்துள்ள செய்தியில், “மன உறுதி, சமநிலை மற்றும் ஆரோக்கியம் ஆகியவை இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது பாராட்டுக்குரியது. ஐக்கிய நாடுகள் சபை, தியானத்தை மன ஆரோக்கியம், உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது.

வல்லுநர்கள் அனைவரும் ஒரு மனநல தொற்றுநோய் உருவாகிறது என கணித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும். மனித மனம் மிகப்பெரிய அதிசயம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் அதை ஒரு துன்பகரமான உற்பத்தி இயந்திரமாக அனுபவிக்கிறார்கள். அது தொடர்ந்து அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறது. தியானம் என்பது மனம் அதிசயமான முறையில் செயல்படுவதற்கு ஏற்ப மாற்றும் செயல்முறையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.