மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சனிக்கிழமை அன்று தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் யாருக்கு எந்த துறை என்பதை பார்ப்போம்.
முக்கிய துறையான உள்துறையை தன்வசமே வைத்துக் கொண்டுள்ளார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதோடு எரிசக்தி, சட்டம் மற்றும் நீதித்துறை, பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் விளம்பரத் துறைகளையும் அவர் கவனித்துக் கொள்வார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் பொதுப் பணித்துறை (பொது நிறுவனங்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு துணை முதல்வரான அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல், கலால் துறை ஒதுக்கீடு.
வருவாய், நீர்வளம், உயர்கல்வி, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், பால்வளம், வனம், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, மீன்வளம் மற்றும் தொழில்துறை பாஜக-வை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வி, சுற்றுலா, சுரங்கங்கள், போக்குவரத்து, வேலைவாய்ப்பு உத்தரவாதம், தோட்டக்கலை மற்றும் சுகாதாரத்துறை ஏக்நாத ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு ஒதுக்கீடு.
மருத்துவக் கல்வி, குடிமைப்பொருள் வழங்கல், விளையாட்டு, சிறுபான்மையினர் மேம்பாடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, வேளாண் துறை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக தனித்து 132 இடங்களை கைப்பற்றியது.
தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். கடந்த 15-ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸை சேர்ந்த 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஒரு வார காலம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து தற்போது அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.