கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தஹவ்வூர் ராணா பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கனட நாட்டு குடிமகன் ஆவார். தற்போது அமெரிக்க அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ராணாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க சொலிசிட்டர் எலிசபெத் பி. ப்ரீலோகர் டிசம்பர் 16-ம் தேதியன்று தாக்கல் செய்த பதில் மனுவில், ராணாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளார்.
ராணா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்க கோரி சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கீழமை நீதிமன்றங்களை நாடினார். ஆனால், அவரிக் கோரிக்கையை ஏற்க அவை மறுத்துவிட்டன. இந்த நிலையில், இறுதி முயற்சியாக அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க கூடாது என தற்போது அமெரிக்க அரசே பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஏற்கெனவே அமலில் உள்ளது. அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ராணாவின் நாடு கடத்துவதை தடுக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்யும்பட்சத்தில் அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது என நீதித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.