உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதி சமாஜ்வாதி எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டில் மின்சாரம் திருட்டு நடந்துள்ளதை கண்டுபிடித்த மின்சாரத்துறை அதிகாரிகள் ரூ.1.91 கோடி அபராதம் விதித்து மின் இணைப்பை துண்டித்தனர்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதியில் உள்ள ஜமா மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆய்வு நடத்த சென்றபோது வன்முறை ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இதில் இத்தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர் ரகுமான் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பல் தொகுதியில் தீப சாரா பகுதியில் உள்ள எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மின் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த 2 மின் இணைப்பு மீட்டர்கள் கடந்த 6 மாதங்களாக ஓடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மின் மீட்டர்கள் எம்ஆர்ஐ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் மின் மீட்டர் சீல்கள் உடைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் சோதனை செய்தபோது 16.48 கிலோ வாட் மின்சாரம் உபயோகத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
எம்.பி.வீட்டில் மின்சாரம் திருட்டு சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டுக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஜியா உர் ரகுமானின் தந்தை மம்லுகர் ரகுமான் பார்க், மின்வாரிய இன்ஜினியர்களுக்கு மிரட்டல் விடுத்தார். ‘‘ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, உங்களை தொலைத்து விடுவோம்’’ என அவர் கூறியுள்ளார். இதை மின்வாரிய இன்ஜினியர்கள் வீடியோ எடுத்து புகார் கொடுத்தனர். இதையடுத்து ரகுமான் பார்க் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.