ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்

மும்பை,

கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கோலாச்சி வந்த சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) இடம்பெற்றிருந்த இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வருகின்றன. முன்னதாக அஸ்வின் என்றாலே கிரிக்கெட்டின் விதிமுறைகளை ஆராய்ந்து புதிய திட்டங்களுடன் விளையாடி கிரிக்கெட்டை பற்றி கூர்மையாக பேசக்கூடியவராக அறியப்படுகிறார்.

அப்படிப்பட்ட அவர் 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியபோது ஸ்டீவ் சுமித் செய்த ரகசிய ஏமாற்று வேலையை கண்டறிந்தது பற்றி முகமது கைப் வியப்புடன் பகிர்ந்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், அக்சர் படேல் ஆகியோருடன் சுமித் டெல்லி அணியில் விளையாடினார்கள்.

அப்போது இந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது அவர்கள் பந்துவீச்சை சமாளிப்பதற்காக டெல்லி அணியின் வலைப்பயிற்சியில் ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வின், அக்சர் படேல் பவுலிங்கை சுமித் ரெக்கார்ட் செய்ததாக கைப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “2020இல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அஸ்வின் நல்ல பார்மில் இருந்தார். அவர் புதிய பந்தில் பவர் பிளே ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். அதே வருடம் நவம்பர் மாதம் துபாயில் 2021 டி20 உலகக்கோப்பை நடைபெறவிருந்தது. அந்த வருட ஐபிஎல் தொடரும் துபாயில் நடைபெற்றது. அந்த சூழ்நிலையில் பயிற்சியில் அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்தி விட்டார்.

ஏன் என்று கேட்டதற்கு என்னால் பவுலிங் செய்ய முடியாது என்று அஸ்வின் சொல்லி விட்டார். அப்போது ஸ்டீவ் சுமித் தனது ஹெல்மெட்டில் கேமரா வைத்துள்ளதாக அஸ்வின் என்னிடம் கூறினார். அதை வைத்து அஸ்வின், அக்சர் போன்ற இந்திய பவுலர்களின் பவுலிங்கை அவர் ரெக்கார்ட் செய்தார். அதை அறிந்த அஸ்வின் இவர் ரெக்கார்ட் செய்வதால் நான் பந்து வீச மாட்டேன் என்று சொன்னார்.

அவரைப் பார்த்து மற்ற பவுலர்களும் பந்து வீசவில்லை. அந்தளவுக்கு கூர்மையாக இருந்த அஸ்வின் ரெக்கார்ட் செய்வதை கண்டுபிடித்து விட்டார். அன்று அஸ்வின் அந்த இடத்தில் விழிப்புணர்வுடன் இருந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அன்று கிரிக்கெட்டில் அஸ்வின் ஒரு கூர்மையான மூளையை கொண்டவர் என்பதை காண்பித்தார்” எனக் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.