Allu Arjun: "நான் மனித நேயமற்றவனா? அன்று நடந்தது இதுதான்…" – நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததும், 9 வயது குழந்தை மூளைசாவடைந்து கோமாவில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். அன்று இரவு சிறையில் இருந்துவிட்டு பிறகு மறுநாளே ஜாமீன் பெற்று வீடு திரும்பினார். இது பெரும் பேசுபொருளானது.

இது குறித்து சட்டசபையில் அல்லு அர்ஜுனைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “அர்ஜுன் செய்தது மனிதமற்ற செயல். அல்லு அர்ஜுன் வந்தால் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், அவர் அடுத்த நாள் படம் பார்க்க வந்துள்ளார். அதுவும் கார் ரூஃப் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வருகிறார்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், “அல்லு அர்ஜூனுக்கு விபத்தில் கை, கால் போன மாதிரி வீட்டுக்குச் சென்று நலம் விசாரிப்பவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிக்கவில்லை” என்று பேசியிருந்தார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்தக் கடுமையானப் பேச்சிற்குப் பதிலளிக்கும் வகையில் பரபரப்பாகச் செய்தியாளர்களைச் சந்துத்து உருக்கத்துடன் பேசியிருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இது குறித்துப் பேசியிருக்கும் அவர், “முன் அறிவிப்பின்றி காவல்துறைக்குத் தெரிவிக்காமல் நான் திரையரங்கிற்குச் சென்றதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், நான் திரையரங்கிற்கு வருவது குறித்து திரையரங்கத்தினர் முன்பே காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர். நீதி மன்றத்தில் அதுதொடர்பாக  விசாரணை நடைபெறுகிறது. உரிய ஆவணத்துடன் அதை நிரூபிக்கப் போராடி வருகிறோம். அதை சட்டப் பூர்வமாகச் சந்திப்போம். ஆனால், இந்த விவகாரத்தில் நிறைய தவறான வதந்திகள் பரப்பப்படுகிறது, தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மக்களிடம் என்னை கெட்டவனாகவும் சித்தரிக்க பல சதி வேலைகள் நடக்கிறது. 

ரோட் ஷோ காண்பிக்கிறேனா?

பொறுப்பில்லாமல் நான் கூட்ட நெரிசலில் ரோட் ஷோ காட்டியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ரசிகர்கள் கூட்ட நெரிசல் அதிமாக இருந்ததால், காரிலிருந்து வெளியே வந்து முகத்தைக் காட்டினால் ரசிகர்கள் அமைதியாவர்கள் என்றுதான் காரின் சன் ரூஃப் கதவைத் திறந்து ரசிகர்களுக்குக் கை அசைத்தேன். அதுமட்டுமில்லாமல் நான் சொன்னால்தான் கூட்டம் கலையும். வேலையெல்லாம் விட்டுவிட்டு அன்புடன் என்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்காக நான் அதைக்கூட செய்யக்கூடாதா? காரின் உள்ளே மறைந்து சென்றால் அது ரசிகர்களை அவமதிப்பதாக இருக்காதா?

நான் தியேட்டர் உள்ளே சென்றபின் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிறுவன் பாதிக்கப்பட்டதாகவும் என்னிடம் கூறினார்கள். உடனே ‘அவர்களைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்’ என்றேன். அதற்கு, ‘அங்குச் சென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சரியான நேரம் வரும்போது போகலாம்’ என்றார்கள். பிறகு, ‘உங்கள் மீது அவர்கள் வழக்குப் போட்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களை நீங்கள் சந்திக்கக் கூடாது’ என்று என்னைத் தடுத்தார்கள் எனது வழக்கறிஞர்கள். என் அப்பாவை அனுப்பி பாதிக்கப்பட்ட குடும்பத்தையும், குழந்தையையும் நலம் விசாரிக்க அனுப்பினேன். 

நானும் ஒரு குழந்தைக்கு அப்பாதான். எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவியின் இழப்பு, குழந்தையின் இழப்பு எவ்வளவு துயரமானது, வலி நிறைந்தது என்று என்னாலும் உணர முடியும். எனக்கும் மனசாட்சி இருக்கிறது. நானும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும், சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைக்கும் என்னவெல்லாம் நல்லது செய்யனும்னு யோசிச்சிட்டேதான் இருக்கேன். அந்தக் குழந்தையின் சிகிச்சைக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும், வாழ்நாள் முழுமைக்கும் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும் என ஆத்மார்தமாக யோசிக்கிறேன். எல்லாத்தையும் தாண்டி பாதிக்கப்பட்டது என் ரசிகர், அவர்களுக்காக என்றும் நான் துணை நிற்பேன். 

நடிகர் அல்லு அர்ஜுன்

நடந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து. என் மீது தொடரப்பட்ட வழக்கை நான் சட்டப்படி சந்திக்கிறேன். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஒன்றே ஒன்றை மட்டும்தான் நான் சொல்ல விரும்புகிறேன் ‘மனித நேயமற்றவன், கெட்டவன், மோசமானவன்’ என என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். அது மிகுந்த வருத்தமளிக்கிறது. நான் எப்படிப்பட்டவன், எவ்வளவு மனிதம் நேயமும் கொண்டவன் என்று என் ரசிர்களுக்கு நன்றாகத் தெரியும். பல ஆண்டுகளாக உழைத்து நல்ல பெயரையும், நம்பிக்கையையும் சம்பாதித்து வைத்திருக்கிறேன். ஒரே இரவில் அதைக் கெடுப்பது நினைப்பது வேதனையளிக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.