Ex சிஎஸ்கே வீரருக்கு பிடிவாரண்ட்… ரூ.24 லட்சம் வரை மோசடி – முழு பின்னணி என்ன?

Robin Uthappa Arrest Warrant, Latest News Updates: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ராபின் உத்தப்பா. 39 வயதான இவர் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்டஸ் என்ற ஆடை நிறுவனத்தை 2015ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (EPF) மோசடி செய்ததாக கூறி அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர் நிலுவைத் தொகையான சுமார் 24 லட்ச ரூபாயை வரும் டிசம்பர் 27ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் செலுத்த வேண்டும். அவ்வாறு முறையாக செலுத்தாவிட்டால் போலீசாரால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபின் உத்தப்பா மீதான புகார்

சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்டஸ் நிறுவனத்தின் இயக்குநராக ராபின் உத்தப்பாவே உள்ளார். இதுகுறிந்து அப்பகுதியின் PF ஆணையர் சடாக்ஷரி கோபால் ரெட்டி கூறுகையில்,”அந்த நிறுவனம் 23 லட்சத்து 36 ஆயிரத்து 602 ரூபாயை நிலுவை வைத்திருக்கிறது. இதனை ராபின் உத்தப்பாவிடம் இருந்து வசூலிப்போம்” என்றார். மேலும், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான இந்த பிடிவாரண்ட் கடந்த டிச.4ஆம் தேதியே பிறக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் பங்கு மட்டுமின்றி, அவர்களின் முதலாளிகளின் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில், ஊழியர்களிடம் இருந்து PF பணத்தை ஊதியத்தில் இருந்து பிடித்துள்ளன ராபின் உத்தப்பா, ஆனால் அதை அவர்களின் PF கணக்குகளில் வரவு வைக்கவில்லை. ராபின் உத்தப்பாவுக்கு வரும் டிச.27ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் பெரிய பிரச்னைதான்.

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா

முன்னாள் கிரிக்கெட் வீரரான உத்தப்பா தற்போது சில லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். மேலும் அவர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 46 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 934 ரன்களையும், 13 டி20ஐ போட்டிகளில் விளையாடி 249 ரன்களையும் எடுத்துள்ளார். 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ராபின் உத்தப்பாவும் இடம்பெற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையில் விளையாடிய ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் இந்தியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என 6 வெவ்வேறு அணிகளில் விளையாடியிருக்கிறார். மொத்தம் 205 போட்டிகளில் 197 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 4952 ரன்களை குவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2021ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பையை வென்றபோது ராபின் உத்தப்பா முக்கிய பங்காற்றி உள்ளார். தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.