Border Gavaskar Trophy Series Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. மாறாக இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனையே போராடிதான் தவிர்த்தது. பெரும்பாலும் ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி டிராவானது. இந்திய அணி முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதற்கும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்ததற்கும் ஒரே வித்தியாசம் டிராவிஸ் ஹெட் தான்.
இந்திய அணியை அச்சுறுத்தும் டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்கிஸில் 534 ரன்கள் இலக்கு என்பதால் டிராவிஸ் ஹெட் அடித்த 89 ரன்கள் பெரியளவில் தாக்கம் அளிக்கவில்லை. இரண்டாவது போட்டியின் அதன் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா ஆட்டத்தை முடித்துவிட்டது எனலாம். இந்தியா முதலில் பேட்டிங் செய்து 180 ரன்களில் ஆல்அவுட்டான நிலையில், டிராவிஸ் ஹெட் மட்டும் 140 ரன்களை குவித்து ஆட்டத்தையே மாற்றிவிட்டார் எனலாம். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் டிராவிஸ் ஹெட் 152 ரன்களை அடித்தார்.
இந்த தொடரில் அதிக ரன்களை அடித்தவரும் டிராவிஸ் ஹெட்தான். அவர் 5 இன்னிங்ஸ்களில் 409 ரன்களை குவித்துள்லார். அதன் சராசரி 81.80 ஆகும். மொத்தம் 4 சிக்ஸர்கள் 47 பவுண்டரிகளை அடித்துள்ளார். அதாவது அந்த 409 ரன்களில் 212 ரன்களை சிக்ஸர், பவுண்டரிகளிலேயே ஹெட் அடித்திருக்கிறார். ஏறத்தாழ 50% ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்திருக்கிறது.
சமாளிப்பது எப்படி?
இப்படியிருக்க, அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்துவது இந்திய அணிக்கு தலையாய பணியாக இருக்கும். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது இந்திய அணியின் மூத்த வீரர் சதேஷ்வர் புஜாராவும், முன்னாள் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சய் பங்கரும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
புஜாரா சொன்ன ஐடியா என்ன?
செதேஷ்வர் புஜாரா கூறுகையில்,”ஹெட்டுக்கு எதிராக வீசும்போது லைன் மிகவும் முக்கியமானது. மிடில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீச வேண்டும். ஓவர் தி ஸ்டம்பில் வந்தாலும் சரி, அரோண்ட் தி ஸ்டம்பில் வந்தாலும் சரி அவருக்கு மிடில் ஸ்டம்பை ஆப் ஸ்டம்ப் போல் ஆகிவிடாதீர்கள். எப்போது லைன் மிடில் ஆஃப்பிலேயே இருக்க வேண்டும். அந்த லைனில் அவர் மிகவும் சிரமப்படுகிறார்.
ஷார்ட் பாலுக்கு எதிராகவும் அவர் ஏற்கனவே சிரமப்படுகிறார். அவர் தனது இயல்பான ஷாட்களை விளையாடுவார், ஆனால் உங்களிடம் ஷார்ட் பாலுக்கு பீல்டர்கள் இருந்தால், அதை மாற்றி மாற்றிப் பயன்படுத்தவும். அனைத்து பந்தையும் ஷார்ட் பாலாக வீச வேண்டிய அவசியமில்லை. அவருக்கு பெரும்பாலான பால்கள் ஸ்டம்ப் லைனில் இருக்க வேண்டும், திடீரென ஷார்ட் பால் போடலாம். இது அவரின் விக்கெட்டை கைப்பற்ற உதவும்” என்றார்.
பிளான் ஏ மற்றும் பிளான் பி
தொடர்ந்து பேசிய சஞ்சய் பங்கர்,”இன்னிங்ஸின் தொடக்கத்தில், அரோண்ட் தி விக்கெட்டில் வந்து பந்துவீசவும். முதல் 10-15 பந்துகளில் அது கைக்கொடுத்தால் அந்தத் திட்டத்தை கடைப்பிடிக்கவும். பிளான் ஏ என்பது அரோண்ட் தி விக்கெட்டில் வந்து அவரை ஆஃப் ஸ்டம்பில் விளையாட வைப்பதாகும். அது கைக்கொடுக்கவில்லை என்றால் ஓவர் தி விக்கெட்டில் வந்து லெக்-சைடில் அதிக ஃபீல்டர்களையும், ஒரு Deep Third Man திசையில் ஒரு பீல்டரையும் வைத்து பந்துவீசவும்.
மிடில்-ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக மூலம், நீங்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய அவரை கட்டாயப்படுத்துகிறீர்கள் என அர்த்தம். ஷார்ட் பாலை எதிர்கொள்ளும்போது, அவரது பேட்டிங் எப்போதும் Deep Third Man, Deep Fine Leg மற்றும் Deep Square ஆகிய இடங்களில் கேட்சிற்கான வாய்ப்பையே உருவாக்குகிறது. இந்த அணுகுமுறை அவரது ஸ்கோரிங் வாய்ப்புகளை தடுக்கும். அவர் மீது அழுத்தத்தை உருவாக்கும். இந்தியா இந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். டிராவிஸ் ஹெட் அச்சுறுத்தலை நடுநிலையாக்க பொறுமையாக இருக்க வேண்டும” என்றார்.