புதுடெல்லி: ரயில்வே உள்ளிட்ட 3 இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக 3 அமெரிக்க நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பிக்க அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடி அபராதம் செலுத்தியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள சட்டங்களின்படி அங்குள்ள நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். இதற்காக அந்நாட்டின் நீதித்துறையும் பங்குச் சந்தை ஆணையமும் வழக்குகள் தொடர முடியும்.
இந்நிலையில் இந்தியன் ரயில்வேஸ், பாதுகாப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), பெட்ரோகெமிக்கல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆகிய 3 இந்திய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் பெறுவதற்காக இவற்றின் அதிகாரிகளுக்கு 3 அமெரிக்க நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க நீதித்துறையும் பங்குச் சந்தை ஆணையமும் கண்டுபிடித்துள்ளன.
விண்வெளி நிறுவனமான மூக் இன்க், லாரி எலிசன் தலைமையிலான தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளுக்கான ஆரக்கிள் நிறுவனம், ரசாயன உற்பத்தி நிறுவனமான அல்பமார்லே கார்ப்பரேஷன் ஆகிய 3 அமெரிக்க நிறுவனங்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பான வழக்குகள் மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்க இந்த 3 நிறுவனங்களும் 20 கோடி டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 1,600 கோடி) அமெரிக்க கருவூலத் துறைக்கு அபராதம் செலுத்தியுள்ளன. இத்தகவலை அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.