புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம் மற்றும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் இலவச போக்குவரத்து அறிவிப்பு என பல மாநிலங்கள் இலவச சலுகைகளை வாரி வழங்குவது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதும் கணிசமாக குறைந்துள்ளது. 2018-19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவை விட 2.5 மடங்கு அதிகரித்து ரூ.4.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.