குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2012-13-ம் ஆண்டில் அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 35 சதவீதம் குழந்தை திருமணம் என்பது தெரியவந்தது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு தொடங்கியது. முதல்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் கட்ட நடவடிக்கையை அசாம் அரசு தொடங்கியது. அப்போது 915 பேர் கைது செய்யப்பட்டனர். 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது 3-ம் கட்டமாக குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை அசாம் அரசு கடந்த 21-ம் தேதி இரவு தொடங்கியது. இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

குழந்தை திருமணத்துக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 3-ம் கட்ட நடவடிக்கையை டிசம்பர் 21-ம் தேதி இரவு தொடங்கினோம். இதில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்பட உள்ளனர். இந்த சமூக அநீதிக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குழந்தை திருமணம் தொடர்பாக அசாமில் ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 4,814 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.