மேக்டேபர்க்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஜெர்மனியின் மேக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
இந்நிலையில் அந்த கூட்டத்திற்குள், ஒரு கார் வேகமாக வந்து சாலையில் செல்வோர் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 41 பேர் ஆபத்தான நிலையிலும், 86 பேர் பலத்த காயங்களுடனும், 78 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்துக்குள் காரை தாறுமாறாக ஓட்டிய நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மருத்துவர் தலேப் (50) என தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் சுமார் 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கிறார்.
ஆனால், இச்சம்பவம் குறித்து சவுதி அதிகாரிகள் கூறுகையில், “காரை ஓட்டிய சவுதி மருத்துவர் தனது எக்ஸ் தளத்தில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவிரவாத கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஜெர்மனி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்றனர்.
ஜெர்மனி ஊடகம் ஒன்று, தாக்குதல் நடத்திய சவுதி மருத்துவர் தலேப்பிடம் கடந்த 2019-ம் ஆண்டு பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவர் தன்னை, முஸ்லிம் பின்னணியை கொண்டவர் என்றாலும், இஸ்லாம் கொள்கைகள் மீது நம்பிக்கையற்றவர் என தெரிவித்துள்ளார். இவர் ஜெர்மனியில் உள்ள ஏஎப்டி கட்சியின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.