டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலையில் இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில்தான் அரங்கேறும். 1974-ல் கச்சதீவை முதல்வராக இருந்த கருணாநிதி தாரை வார்த்து கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய அரசுக்கும் தலைவலியாக இருக்கிறது. நட்புறவு நாடாக இருப்பதால், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் மீட்கப்படுகின்றனர். காவிரி ஒப்பந்தத்தையும் காலாவதியாக்கி விட்டார். டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது.

நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு கோப்புகளில் கையேத்திட்டவர், இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். டங்ஸ்டன் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக. இப்போது கபட நாடகம் ஆடுகிறது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைபாடு. இந்த திட்டம் வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளனர். நல்ல செய்தி வரும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி அரசு கொடுத்ததை போன்று, தமிழக மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், இவர்கள் சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளது. தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும். நாங்களும் உறுதுணையாக இருப்போம். மத்திய குழு வருவதற்கு முன்பே ரூ.1000 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. நிதியை முறைகேடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மத்திய அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.

தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக 200 தொகுதிகளை வெற்றி பெறுவோம் என திமுக கூறுகிறது. திமுகவுக்கு எதிராக மக்கள் சக்தி ஒன்று திரண்டுள்ளது. பழனிசாமி ஆட்சி மீதிருந்த கோபத்தால் திமுக திருந்திருக்கும் என்று அவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு எதிராக மக்களை ஏமாற்றியும், பூச்சாண்டி காண்பித்தும் திமுகவும் பேசியது. இப்போது மக்களுக்கு புரிந்துவிட்டது. தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். சிறுபான்மையின பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களை, சிறுபான்மையினரே முறியடிப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையை அமைக்கும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்துள்ள பழனிசாமிக்கு சுயநலம் மற்றும் துரோகத்தை பற்றி எதுவும் தெரியாது. பதவிக்காக யாருடைய காலையும் பிடிப்பார். டிடிவி தினகரன் ஒன்றுமே இல்லை, 4 பேர் மட்டும் இருக்கின்றனர் என்று கூறிய பழனிசாமி, இப்போது அமமுக ஒரு கப்பல் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருப்பது பழனிசாமி கப்பல்தான். 10 தோல்வி பழனிசாமியாக வலம் வருகிறார். 2026-ல் நடைபெற உள்ள தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார்.

ஜெயலலிதாவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான், திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த முடியும். எம்ஜிஆர் கண்ட வெற்றி சின்னமான இரட்டை இலை, திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, பழனிசாமி பயன்படுத்தி வருகிறார். அழிவை நோக்கி போய்கொண்டிருக்கிறார்.

சாத்தனூர் அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைத்திருந்தால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்காது. திமுக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த மாவட்டத்திலேயே 3 மாதத்தில் கட்டப்பட்ட பாலம், அடித்து செல்லப்பட்டுள்ளது என்றால், ஆட்சியில் முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. ஓரே நாடு ஓரே தேர்தல் குறித்து எதிர்கட்சிகள் அச்சப்பட வேண்டாம். எதிர்க்கும் அளவுக்கு குறைபாடு இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். எங்கள் கூட்டணி பலம் பெறும். திமுகவை வீழ்த்தும் சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும். தமிழகத்தில் முறைகேடு நடைபெறுவதால் யோசித்து மத்திய அரசு நிதியை கொடுக்கிறது. தன்னுடைய இயலாமையை மற்றவர்கள் மீது சுமத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என மக்களுடன் இணைந்து எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதை சடங்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியது சரியில்லை. அம்பேத்கர் குறித்து தனக்குள்ள உயர்வான கருத்தை அறிக்கை மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார். அரசியல் செய்வதற்காக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறது.

தமிழகத்தில் கஞ்சா, போதை மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர், அமைச்சர் குடும்பத்தை தவிர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லையில் கொலை செய்தவர்களை காவல்துறை பிடிக்கவில்லை, வழக்கறிஞர்கள் படித்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. முதல்வர் அமைதியாக இருக்கிறார். எங்கள் ஆட்சியில் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று தனக்கு தானே ஆதரவு தெரிவித்து கொள்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக வெளியே பேசிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திமுக துணையாக இருக்கும். ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்” என்றார். முன்னதாக, நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.