தாராவி: "அதானியின் டெண்டர் செல்லும்…" – குடிசை மேம்பாட்டுத் திட்ட வழக்கில் தீர்ப்பு; பின்னணி என்ன?

நாட்டில் அதிக குடிசைகள் இருக்கும் பகுதியாக மும்பை தாராவி இருக்கிறது. அக்குடிசைகள் அனைத்தையும் இடித்துவிட்டு அங்குப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் டெண்டர் விட்டு இத்திட்டத்தை அதானி நிறுவனத்திற்குக் கொடுத்தது. ஆனால் 2018ம் ஆண்டு விடப்பட்ட முந்தைய டெண்டரை துபாயைச் சேர்ந்த சிலிங் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு மாநில அரசு டெண்டர் கொடுத்திருந்தது. பணியை அந்நிறுவனம் தொடங்க இருந்த நிலையில் அந்த டெண்டரை மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த போது புதிய டெண்டர் விடப்பட்டுப் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிலிங் டெக்னாலஜி நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

தாராவி குடிசைப்பகுதி

அதில் புதிய டெண்டரில் தங்களது நிறுவனம் பங்கேற்கக் கூடாது என்பதற்காகப் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இம்மனு நீதிபதி தேவேந்திர குமார், அமித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் சாதே, கடந்த 30 ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் வெளிப்படையான ஒப்பந்தம் மூலம் அதானி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டெண்டரில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

டெண்டர் தொகை அதிகமாகக் கேட்டு இருப்பதாக சீலிங் நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய கடிதம், ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திற்கு வழங்கியதாகாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இத்திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியதை உறுதி செய்தனர்.

“ஒரு நிறுவனம் ஏலத்தொகையை அதிகமாகக் கேட்டிருக்கிறது என்பதற்காக அந்நிறுவனம் அப்பணிகளுக்கு உரிமை கோர முடியாது. அல்லது பணி ஒப்பந்தத்தைப் பெற்றதாகக் கருத முடியாது. புதிய டெண்டர் விடப்பட்டபோது அதில் சேர்க்கப்பட்ட புதிய விதிகள் குறித்து சீலிங் நிறுவனம் கேள்வி எழுப்பி இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை. எனவே புதிய டெண்டர் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்க்க முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தாராவி மொத்தம் 259 ஹெக்டேர் பரப்பு கொண்டது ஆகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த தாராவியில் அதானி நிறுவனம் குடிசைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை 27 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசைகள் ஆவணங்களுடன் கணக்கெடுக்கப்பட்டு இருப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாராவி குடிசைப்பகுதி

அதோடு குடிசைகள் கணக்கெடுப்பின் போது மக்களுக்குக் குறைகள் இருந்தால் அது குறித்துத் தெரிந்து கொள்ள அதானி நிறுவனம் சிறப்பு ஹெல்ப்லைன் ஒன்றையும் தொடங்கி இருக்கிறது. தாராவி குடிசைவாசிகளுக்கு வீடு வழங்குவதற்காக முதல் கட்டமாக மாட்டுங்கா பகுதியில் ரயில்வேயிடம் பெறப்பட்ட நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியை அதானி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. தாராவி குடிசைகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மாற்று வீடு கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக மும்பையின் புறநகர்ப் பகுதியில் கூடுதல் நிலங்களை மாநில அரசிடம் அதானி நிறுவனம் வாங்கி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அரசு மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால், தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டப்பணிகளை விரைவு படுத்த அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.