பாமக உழவர் மாநாடு: 'நீரா பானம்; ஆக்கிரமிப்பு ஏரிகளை மீட்க தனி வாரியம்' – நிறைவேறிய 45 தீர்மானங்கள்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான `தமிழ்நாடு உழவர் பேரியக்கம்’ சார்பில் உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் மாநில மாநாடு நடைபெற்றது.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்னைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்துப் பரிந்துரைக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிய தி.மு.க அரசுக்குக் கண்டனம். வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும். உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக, ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்.

பாமக உழவர் பேரியக்க மாநாடு

மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும். நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்கத் தனி வாரியம் அமைக்க வேண்டும். உழவர்களின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; வட்டி மானியம் வழங்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ரூ.3,500, கரும்புக்கு டன் ரூ.5,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் கொள்முதல் விலை வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் வகையில் வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும்.

பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத் தனிக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாது அணை கூடாது – காவிரி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வலிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் பாசனத் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாநில வேளாண்மை கொள்கையை உருவாக்கி வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கூடாது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் கூடுதல் நீரைத் திறக்க வேண்டும். வீராணம் ஏரியின் கொள்ளளவை 2 டி.எம்.சி-யாக உயர்த்த வேண்டும்.

மதுராந்தகம் ஏரியைச் சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நந்தன் கால்வாய்த் திட்டம் மற்றும் தென்பெண்ணை – துரிஞ்சலாறு இணைப்பைச் செயல்படுத்த வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் மணல் குவாரிகளை மூடி, தடுப்பணைகளை அமைக்க வேண்டும். பாலாற்றில் குறைந்தது 25 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

பாமக உழவர் பேரியக்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும். சென்னை அருகே அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தொழில், வணிகத் திட்டங்களுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதைத் தமிழ்நாடு அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். விளைநிலங்களில் கருவேலமரங்களை அகற்ற அரசு மானியம் வழங்க வேண்டும். நீரா பானத்தை வணிக அடிப்படையில் விற்பனை செய்யத் திட்டம் வகுக்க வேண்டும். நியாயவிலைக்கடைகளில் நாட்டுச் சர்க்கரை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளிடம் ரூ.60 என்ற விலையில் செங்கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PesalamVaanga

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.