முக்கிய வீரருக்கு காயம்? மீண்டும் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவா… பிளேயிங் லெவனில் சின்ன மாற்றம்

Border Gavaskar Trophy Series Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground) நடைபெற உள்ளது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்துவரும் நிலையில் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

கடந்த பிரிஸ்பேன் போட்டியை போன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியும் 5 நாள்கள் வரை பரபரப்பாக செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் மழை குறுக்கிட்டாலும், இந்த போட்டியில் முழுமையாகவே சூரியன் சுட்டெரிக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி (Team Australia) வெற்றிக்கு முட்டிமோதுவதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தனியொருவனாக போராடும் பும்ரா

இந்திய அணி (Team India) தற்போது பும்ராவையே பெரிதும் நம்பி இருக்கிறது. அவர் இந்த தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். அவரின் சராசரியும் 10.90 ஆக உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் பும்ராவுக்கு (Jasprit Bumrah) உறுதுணையாக எந்த வேகப்பந்துவீச்சாளரும் இன்னும் முழு திறனை வெளிக்கொண்டுவரவில்லை. பெர்த் டெஸ்டில் கூட சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் விக்கெட் எடுத்தாலும், அவர்களிடம் தொடர்ச்சியான தாக்குதல் வியூகம் இல்லை.

கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் தீப் கூட இன்னும் சில இடங்களில் முன்னேற்றங்களை காண வேண்டும். அதுவும் மெல்போர்னில் அவரின் இயல்பான குட் லெந்த் பந்துகள் நிச்சயம் கைக்கொடுக்கலாம். இருப்பினும் பவுன்ஸை எதிர்பார்க்கலாம் என்பதால் சூழலை கணித்து லைன், லெந்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாள்கள் செல்ல செல்ல ஆடுகளங்களில் விரிசல் அதிகமாகலாம், ஆடுகளமும் பந்தின் வேகத்தை குறைக்கவே செய்யவும்.

பிளேயிங் லெவன் மாற்றம்?

இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருக்கும். எனவே, நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்தில் இந்தியா பிளேயிங் லெவனை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் இல்லாததால் ஜடேஜாவுடன், வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) களமிறங்குவார். 

பந்துவீச்சு ஒருபுறம் என்றால் பேட்டிங் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஓப்பனிங்கில் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் (KL Rahul) நம்பிக்கை அளித்தாலும் பெரிய ஸ்கோருக்கு செல்ல இவர்களின் தயவு தேவை. ஜெய்ஸ்வால் கட்டுப்பாட்டுடன் ரன்களை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (Rohit Sharma) சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேஎல் ராகுலுக்கு காயம்?

இந்நிலையில், மெல்போர்ன் நகரில் இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், இந்திய அணியின் ஓப்பனர் கேஎல் ராகுல் காயத்தில் (KL Rahul Injury) சிக்கியதாக தகவல்கள் வருகின்றன. வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து வந்தபோது அவரது விரலில் காயம் ஏற்பட்டதாகவும், உடனே பிஸியோ அவரை சோதித்ததாக கூறப்படுகிறது. இதுசார்ந்த ஒரு வீடியோவும் வைரல் ஆகிவருகிறது. இருப்பினும் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை.

KL Rahul suffered a hand injury at the MCG nets today during practice session. #INDvAUS pic.twitter.com/XH8sPiG8Gi

—  (@rushiii_12) December 21, 2024

கேஎல் ராகுல் தான் முதலிடம்!

கேஎல் ராகுலுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்தோ, அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்தோ இந்திய அணி தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேஎல் ராகுல்தான் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை அடித்தவர் ஆவார். 6 இன்னிங்ஸ்களில் சராசரி 47 உடன் 235 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடக்கம். அப்படியிருக்க, கேஎல் ராகுல் காயத்தால் விளையாடவில்லை என்றால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

கேஎல் ராகுல் விளையாடாவிட்டால் என்னவாகும்…?

ஒருவேளை கேஎல் ராகுல் விளையாடாதபட்சத்தில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. கேஎல் ராகுல் இல்லாதபட்சத்தில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சாளர் என ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

அதாவது, ரோஹித் சர்மா மீண்டும் ஓப்பனராக வருவார். ராகுலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரும் அணிக்குள் வருவார். இதனால் இந்திய அணிக்கு பிரச்னை குறையலாம். ஆனால், ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம்தான் பெரிய கவலை எனலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.