நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள மல்டிபளக்ஸ் திரையரங்கு ஒன்றில் புஷ்பா 2 திரைப்படத்தின் பின்னிரவு காட்சியின் போது, போலீஸார் அரங்குக்குள் நுழைந்து தேடப்பட்டு வந்த கொலை மற்றும் கொள்ளை குற்றவாளியை கைது செய்தபோது பார்வையாளர்கள் அதிரடி அனுபவத்துக்கு ஆளாகினர்.
இரண்டு கொலைகள், கொள்ளை மற்றும் போலீஸாருக்கு எதிரான குற்றங்கள் உட்பட 27 வழக்குகளில் தேடப்பட்டு வந்த 10 மாதங்கள் தலைமறைவாக இருந்து வந்த விஷால் மெஷ்ராம் என்ற குற்றவாளியை போலீஸார் வியாழக்கிழமை இரவு திரைப்படத்தின் க்ளைமாக்ஸின் போது சினிமா பாணியில் திரையரங்குக்குள் நுழைந்து கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறும் போது, “மெஷ்ராமுக்கு சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் ஆர்வம் அதிகம் இருப்பதை அறிந்த போலீஸார் அதைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்ய தீர்மானித்தனர். அதற்காக சைபர் கண்காண்ப்பு மூலம் அவரின் புதிய எஸ்யுவி வாகனத்தை கண்காணித்து வந்தனர்.
தொடர் கண்காணிப்பின் மூலம் வியாழக்கிழமை மெஷ்ராம் படம் பார்க்க வந்திருப்பதை அறிந்த போலீஸார், நகரின் மையத்தில் இருந்து மல்டிபிளக்ஸ் திரையங்குக்கு வெளியே காத்திருந்தானர் மெஷ்ராம் தப்பி ஓடாமல் இருப்பதை உறுதி செய்ய திரையரங்குக்கு வெளியே நின்ற எஸ்யுவி-யின் டயர்களில் காற்றினை இறக்கி விட்டிருந்தனர்.
படத்தின் இறுதிக் காட்சியின் போது அரங்கிற்குள் நுழைந்த போலீஸார் திரைப்படத்தில் மூழ்கி இருந்த மெஷ்ராமை சுற்றிவளைத்து கைது செய்தனர். திரையரங்கில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மெஷ்ராமால் எதிர்ப்பினை வெளிப்படுத்த முடியவில்லை. தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெஷ்ராம், விரைவில் நாசிக் மத்திய சிறைக்கு மாற்றப்படுவார்” என்று தெரிவித்தனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படமான புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாகும். பான் இந்தியா பாணியில் வெளியான இந்தப் படம், இந்தி, தமிழ், கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளியானது. தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.