இந்திய அணிக்கு ஜாக்பாட் தான்… சாம்பியன்ஸ் டிராபியை அடிக்க சூப்பர் வாய்ப்பு!

ICC Champions Trophy 2025 Schedule Latest Updates: ஐசிசி கோப்பை தொடர் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அந்த வகையில், வரும் ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் சீசன் நிறைவடையும் நிலையில், பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் இருந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. பிப்.23ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் தொடரை நடத்துகிறது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (ICC Champions Trophy 2025) மொத்தம் 8 அணிகள் போட்டியிடும். கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை தவிர்த்து முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் தகுதிபெற்றது. அந்த வகையில், முதல் பிரிவில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் உடன் இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இன்னும் ஐசிசி வெளியிடவில்லை.

பொதுவான இடத்தில் இந்தியா போட்டி 

இருப்பினும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்த தொடர் கராச்சி, லாகூர், ராவில்பிண்டி என மூன்று நகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அரையிறுதிப்போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி சேர்த்து மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணி (Team India) பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அணி மோதும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றும் இதே நடைமுறைதான் இந்தியாவில் நடைபெறும் தொடர்களுக்கும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியும் இந்தியா வராது!

அதாவது பாகிஸ்தானும் அடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது. இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இரு நாடுகளிலும் இன்றி பொதுவான இடத்தில் நடத்தப்படும். 

அந்த வகையில், இந்தியாவில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் மகளிருக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர், 2026ஆம் ஆண்டு நடைபெறும் ஆடவருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் அணி (Team Pakistan) இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது. 2027ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின்போதும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என தெரிகிறது. 

துபாயில் இந்தியா போட்டிகள் 

இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி விளையாடும் பொதுவான மைதானம் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோதும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றால், முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறும். இந்த போட்டிக்கு ரிசர்வே டே கிடையாது. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றால் அந்த போட்டி துபாயில் நடைபெறும். இந்தியா அரையிறுதியோடு வெளியேறிவிட்டால் இறுதிப்போட்டி லாகூரில் நடைபெறும் என தெரிகிறது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் மோதி 5இல் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டுமே டிராவாகி உள்ளது. இங்கு இந்திய அணி ஒருநாள் போட்டியில் தோல்வியே அடைந்திராத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி இங்குதான் விளையாடுகிறது. துபாய் மட்டுமின்றி ஷார்ஜா, அபுதாபி என மொத்தம் 3 சர்வதேச மைதானங்களே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.