இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இன்னும் 100% முழுவதும் குணமாகவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்கி 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி 2 டெஸ்டில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஷமியின் உடற்தகுதி குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) தான் இதற்கான பதிலை கூற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
காயத்தில் இருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கும் ஷமி, சமீபத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும் விளையாடினார். அங்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஷமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக ஷமியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
News
Medical & Fitness Update on Mohammed Shami #TeamIndia
Read
— BCCI (@BCCI) December 23, 2024
“ஷமி மீண்டும் பந்துவீச ஆரம்பித்துள்ளதால் அவரது மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது இடது முழங்கால் சிறிய வீக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் பந்துவீச தொடங்கியதால் வீக்கம் அதிக அளவில் உள்ளது. தற்போதைய மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில், அவரது முழங்கால் மீண்டும் பழையபடி சரியாக அதிக நேரம் தேவை. இதனால் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட்களுக்கு அவர் இடம் பெற மாட்டார்” என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பிசிசிஐயின் சிறப்பு மருத்துவ குழுவினரின் வழிகாட்டுதலின் கீழ் ஷமி சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். வலிமை மற்றும் கண்டிஷனிங் பணியை தொடர்ந்து மேற்கொள்வார். நீண்ட நேரம் பந்துவீச தேவையான உடற்தகுதியை அடையும் வரை ஷமி ஓய்வில் இருப்பார். விஜய் ஹசாரே டிராபியில் அவர் பங்கேற்பது அவரது முழங்காலின் காயம் பொறுத்து முடிவு செய்யப்படும்” என்று பிசிசிஐ தரப்பில் மேலும் தெரிவித்துள்ளனர். ஷமி கடைசியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். அதன்படி ஒரு வருடம் தீவிர ஓய்வில் இருந்து வரும் ஷமி சமீபத்தில் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.